பாதுகாப்பு படை போலீசார் கல் வைத்த மர்ம நபர் குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கேரளம் மாநிலம் பாலக்காட்டில் இருந்து பழனி - திண்டுக்கல் வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று நள்ளிரவு வந்து கொண்டிருந்தது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை - கேத்தாண்டப்பட்டி ரெயில் நிலையங்களுக்கிடையே காவேரிபட்டு என்ற இடத்தில் ரெயில் வந்தது. அப்போது தண்டவாளத்தில் பெரிய கல் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட ரெயில் என்ஜின் டிரைவர் அதிர்ச்சி அடைந்து சாதுரியமாக ரெயிலை நிறுத்தினார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பெயரில் ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
தண்டவாளத்தில் வைத்திருந்த கல்லை அகற்றினர். இந்த தகவலை அறிந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் 20 நிமிடம் தாமதமாக ரெயில் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.
இதனை தொடர்ந்து சுற்று பகுதியில் பாதுகாப்பு படை போலீசார் கல் வைத்த மர்ம நபர் குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியில் வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். அவரை பிடித்து போலீசார் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.