நாமக்கல் மாவட்டம் கருங்கல்பட்டி என்னும் இடத்தில் மிக அரிய உலோகமான பிளாட்டினம் படிமங்கள் இருப்பதாக கடந்த 2008-ம் ஆண்டு இந்திய புவியியல் ஆய்வு துறை கண்டுபிடித்தது.
பிளாட்டினம் படிமங்களால் உலகளாவிய தொழில் வரைபடத்தில் புதிய முத்திரை பதிக்க தயாராகி வருகிறது நாமக்கல்.
முட்டை என்றவுடன் நாமக்கல் மாவட்டம் தான் நம் அனைவரின் நினைவுக்கும் வரும். ஏனெனில் இங்கு உற்பத்தியாகும் முட்டை தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளிலும் தனது முத்திரையை பதித்து உள்ளது என்றால் மிகையாகாது. முட்டை நகரம் என்று பெயர் உள்ள நாமக்கல் மாவட்டம் அடுத்த அத்தியாயத்திற்கு காத்திருக்கிறது என்றே கூறலாம்.
அது என்ன அடுத்த அத்தியாயம். தொழில்வளர்ச்சிக்கு முன்னோடியாக இருக்கும் நாமக்கல் உலக அரங்கையே திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கும் வளம் பெறும் சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளது. அதாவது இங்கு பூமிக்கடியில் பிளாட்டினம் இருப்பதை புவியியல் வல்லுனர்கள் கண்டறிந்து உள்ளனர். இது குறித்த விவரம் இதோ....
நாமக்கல் மாவட்டம் கருங்கல்பட்டி என்னும் இடத்தில் மிக அரிய உலோகமான பிளாட்டினம் படிமங்கள் இருப்பதாக கடந்த 2008-ம் ஆண்டு இந்திய புவியியல் ஆய்வு துறை கண்டுபிடித்தது.
இதையடுத்து அந்த பகுதியில் இந்திய புவியியல் ஆய்வு துறை மற்றும் டாமின் (தமிழ்நாடு கனிமவளத் துறை) நிறுவனமும் இணைந்து பிளாட்டினம் படிமங்கள் எங்கெங்கு உள்ளன?, எத்தனை அடி ஆழத்தில் உள்ளது?, எத்தனை சதவீதம் உள்ளது?, அவ்வாறு அவை கிடைக்கும் பட்சத்தில், அந்த பிளாட்டினம் உலகத்தரம் வாய்ந்ததாக இருக்குமா? என பல்வேறு கோணங்களில் தங்களது ஆய்வு பணியை தொடங்கினார்கள்.
அந்த ஆய்வில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அதன்படி தங்கத்தை காட்டிலும் விலைமதிப்பு மிக்க பிளாட்டினம் கருங்கல்பட்டி மட்டுமின்றி அதன் அருகே உள்ள கிராமங்களான தொட்டியம் தோட்டம், பாமகவுண்டம்பாளையம், தாசம்பாளையம், சித்தம்பூண்டி ஆகிய இடங்களில் பிளாட்டின படிமங்கள் இருப்பது முதலில் கண்டறியப்பட்டது.
அதேவேளையில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் இங்கிலாந்து நாட்டினர் மேற்குறிப்பிட்ட பகுதியில் சுரங்கம் தோண்டி கனிம வளங்களை வெட்டி எடுத்து சென்றதற்கான தடயங்களும் கண்டறியப்பட்டன. இதைத்தவிர சம்பந்தப்பட்ட கிராம பகுதிகள் கனிம வளம் நிறைந்த பகுதி என்பதால், அவற்றை தனி நபர்களும் பட்டா கொடுக்க இயலாத வகையில் ஆவணங்கள் தயார் செய்திருந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து இந்திய புவியியல் ஆய்வு துறை, தமிழக கனிமவளத்துறை இணைந்து மேற்குறிப்பிட்ட கிராம பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு வரையில் சுமார் 6 ஆண்டுகள் பிளாட்டின படிமங்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டன. அந்த வகையில் இந்திய புவியியல் வல்லுனர்கள் பிளாட்டினம் படிவம் இருப்பதை உறுதி செய்ய எந்திரம் மூலம் பூமியில் சிறிய துளையிட்டு, குழாய்கள் மூலம் உருளை வடிவில் கற்களை வெளியே எடுத்தனர்.
பலநூறு அடி வரை துளையிட்டு கற்கள் வெளியே எடுக்கப்பட்டன. அவ்வாறு எடுக்கப்படும் கற்களை முதலில் தரம் பிரித்து, பிறகு அவற்றில் தரமான கற்களை தனியாக பிரித்து அவற்றை மாவு போல் அரைத்து, இந்திய புவியியல் ஆய்வு துறைக்கு சொந்தமான ஆய்வு கூடங்களுக்கு அனுப்பப்பட்டன. இந்த பணி 6 ஆண்டுகள் நடந்தன.
சம்பந்தப்பட்ட இடம் மொத்தம் 4,800 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசு புறம்போக்கு நிலமாக உள்ளது. இங்கு பிளாட்டினம் படிமம் இருப்பது உறுதி செய்யப்பட்டால், மேற்குறிப்பிட்ட பகுதியில் இந்திய புவியியல் ஆய்வு துறை மற்றும் தமிழ்நாடு கனிமவளத்துறை மூலம் பிளாட்டினம் சுரங்கம் அமைக்க வாய்ப்புள்ளது.
அவ்வாறு சுரங்கம் அமைத்தால் சர்வதேச அளவில் நாமக்கல் மாவட்டம் பெயர் புகழடைய வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி அரசுக்கு வருமானம், வேலை வாய்ப்பு என பலவிதங்களிலும் மாவட்டம் ஏற்றம் காண வாய்ப்புள்ளது. எனினும் எப்போது சுரங்கம் அமைக்கப்படும்? போதிய வருவாய் ஈட்டித்தரக்கூடிய அளவில் பிளாட்டின படிமங்கள் உள்ளதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் இது குறித்து வல்லுனர்களின் 6 ஆண்டுகளான ஆய்வு பணிக்கு பிறகும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்த அறிவிப்பு வெளியானால் நாமக்கல் மாவட்டத்தில் பிளாட்டினம் சுரங்கம் உலக அரங்கை அதிர வைக்கும்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறும் போது, இந்த பகுதியில் சுமார் 6 ஆண்டுகள் ஆய்வுகள் நடந்தன. அதன் பிறகு கற்கள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டன. இதுவரை இங்கு பிளாட்டினம் சுரங்கம் அமைக்க சாத்திய கூறுகள் உள்ளதா? என அறிவிக்கப்படவில்லை. எனவே ஆய்வின்படி இங்கு சுரங்கம் அமைக்க வாய்ப்பு உள்ளது அல்லது இல்லை என்ற விவரத்தை அரசு தெரிவிக்க வேண்டும் என்றனர்.
இதற்கிடையே புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், பரமத்திவேலூர் பகுதியில் மத்திய புவியியல் அதிகாரிகள் ஆய்வு செய்து பிளாட்டினம் படிமம் இருப்பதை உறுதி செய்து இருக்கிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் சுரங்கம் அமைத்து பிளாட்டினம் எடுக்கும் போது, அதன் மதிப்பை விட தோண்டி எடுக்கப்படும் செலவு அதிகம் என மதிப்பிடப்படுகிறது. பிளாட்டினம் விலை இன்னும் உயரும் போதோ அல்லது பிளாட்டினம் தேவை அதிகரிக்கும் போதோ இந்த பகுதியில் சுரங்கம் நிச்சயம் அமையும் என்றனர்.