சென்னை:
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க., அன்புமணி தலைமையிலான பா.ம.க., டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக தீவிர பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19-ந்தேதி டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். பின்னர் அவர் 4 நாட்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்கிற தகவலையும் தெரிவித்தார்.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிரதான கட்சிகளான அன்புமணி தலைமையிலான பா.ம.க., டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க ஆகிய கட்சிகளுக்கு எத்தனை இடங்களை ஒதுக்குவது என்பது பற்றிய பேச்சுவார்த்தைகளும் ஏற்கனவே நடத்தப்பட்டு இருக்கிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 179 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க. இந்த முறை 170 இடங்களில் களம் இறங்க திட்டமிட்டு உள்ளது. அதற்கு ஏற்ற வகையிலேயே கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க. தலைமையிடம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்தே அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், அன்புமணி ஆகியோர் டெல்லி சென்று உள்ளனர். அங்கு இவர்கள் போட்டியிட உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையும் முடிவாகி இருக்கிறது.
இதனை தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும் மத்திய மந்திரிமான பியூஷ் கோயல் மீண்டும் நாளை சென்னை வரவிருக்கிறார். அவர் ஏற்கனவே தமிழகம் வருகை தந்தபோது எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. 2-ம் கட்ட தலைவர்களுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். இந்த முறை இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒரே நாளில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.
பியூஷ் கோயல் சென்னை வந்ததும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது பற்றிய தொகுதி பங்கீடு கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.