திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த நடுவூர் மாதா குப்பம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த மாதா சிலையின் கன்னத்தில் இருந்து எண்ணெய் போன்ற திரவம் வடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பழவேற்காடு, நடுவூர் மாதா குப்பம் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் ராஜன் மற்றும் சகாயமேரி. இவர்கள் தங்களது வீட்டில் சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட மாதா சிலையை வைத்து, நாள்தோறும் பயபக்தியுடன் வழிபாடு மற்றும் பிரார்த்தனை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அந்த மாதா சிலையின் கன்னப் பகுதியிலிருந்து திடீரென எண்ணெய் போன்ற திரவம் வடிவதை ராஜன் குடும்பத்தினர் கவனித்துள்ளனர்.
இதனைக் கண்டு மிகுந்த ஆச்சரியமும் பரவசமும் அடைந்த ராஜன் குடும்பத்தினர், உடனடியாக அந்த மாதா சிலையை எடுத்துச் சென்று அப்பகுதியில் அமைந்துள்ள மகிமை மாதா ஆலயத்தில் ஒப்படைத்து வைத்தனர்.
மாதா சிலையில் எண்ணெய் வடிந்த தகவல் காட்டுத்தீ போல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவியது. இதையடுத்து, நடுவூர் மாதா குப்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மகிமை மாதா ஆலயத்திற்குத் திரண்டு வந்தனர். ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த மாதா சிலையை அவர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டுச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, ஆலயத்தின் பங்குத் தந்தை பாதிரியார் ரொசாரியா தலைமையில் சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து இந்த மாதா சிலையைப் பார்ப்பதற்காகப் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் ஆலயத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.