முதலமைச்சர் விஜய் 
தமிழக செய்திகள்

சென்னையில் 2-ம் கட்ட மின்சார பஸ்கள்: முதலமைச்சர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்

ஆலந்தூர் மின்சாரப் பஸ் பணிமனைக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேற்று நேரில் சென்று மின்சார உள்கட்டமைப்பு பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

சென்னையில் 2-ம் கட்ட மின்சார பஸ்கள் இயக்கத்தை முதலமைச்சர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்.

2-ம் கட்டமாக 750 மின்சார பஸ்கள்

சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், முதற்கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில், 625 தாழ்தள மின்சாரப் பஸ்கள் (மொத்த விலை ஒப்பந்தத்தின் அடிப்படையில்) வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்ட்ரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 உள்ளிட்ட 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பஸ்கள் ஆலந்தூர், சென்டிரல் பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே. நகர் மற்றும் ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட 7 பணிமனைகளில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

இதில் முதன் முதலாக ஆலந்தூர் பணிமனையில் இருந்து 130 ஏ.சி. மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த மின்சார பஸ்கள் இயக்கத்தை முதலமைச்சர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி நாளை தொடங்கி வைக்கிறார். அதன்படி, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் 5 மின்சார பஸ்களை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைப்பார். அதைத் தொடர்ந்து இதர மின்சார பஸ்கள் ஆலந்தூர் பணிமனையில் இருந்து இயக்கப்படும்.

இந்த நிலையில், ஆலந்தூர் மின்சாரப் பஸ் பணிமனைக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேற்று நேரில் சென்று மின்சார உள்கட்டமைப்பு பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, மின்னேற்றிகளின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் த.மோகன், இணை மேலாண் இயக்குனர் ராம.சுந்தரப்பாண்டியன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.