நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரத்தில் இருந்து பேளுக்குறிச்சி செல்லும் சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று பிற்பகலில் பெட்ரோல் அடிக்க வந்த 2 வாலிபர்களுக்கும், பங்க் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அங்கிருந்து சென்ற வாலிபர்கள், மேலும் 4 பேரை அழைத்து வந்து பங்க் ஊழியர்கள் 2 பேரை விரட்டி, விரட்டி சரமாரியாக தாக்கினர்.
மேலும் 6 பேர் கும்பலின் பிடியில் இருந்து தப்பி அங்குள்ள அலுவலக அறைக்குள் புகுந்து கொண்ட பங்க் ஊழியரை மீண்டும் தாக்க கண்ணாடி கதவுகளை வாலிபர்கள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் காயமடைந்ததாக இரு தரப்பினரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பங்க் ஊழியர்கள் மற்றும் 6 பேர் கும்பல் சரமாரியாக தாக்கி கொள்ளும் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பேளுக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.