தமிழக செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை: 6வது முறையாக இன்றும் உயர்வு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல்-டீசல் விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்தது. 2022-ம் ஆண்டில் ஏற்றம் கண்டதுபோல மீண்டும் வீரியம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. முன்புபோல் அடிக்கடி விலை உயர்வை காணத்தொடங்கியுள்ளது.

அதாவது மேற்காசியப் போரின் விளைவால் ஈரான் மூடிய ஹார்முஸ் நீரிணையால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு இப்போது அதன் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்தித்து வந்தன. இந்த இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு கலால் வரியை குறைத்தும், இழப்பு ஈடாகவில்லை.

இழப்பை ஈடுசெய்ய பெட்ரோல்-டீசல் விலை கடந்த 15-ம் தேதியில் இருந்து ஏறத் தொடங்கியது. அன்றைய தினம் பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் 6 காசும், டீசல் 3 ரூபாய் 8 காசும் உயர்ந்தது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 19-ம் தேதி பெட்ரோல் 74 காசும், டீசல் 78 காசும் அதிகரித்தது. தொடர்ந்து 3-வது முறையாக கடந்த 23-ம் தேதி பெட்ரோல் 80 காசும், டீசல் 85 காசும் உயர்ந்து காணப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 4-வது முறையாக நேற்று முன்தினம் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 46 காசும், டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் 57 காசும் அதிகரித்தது.

கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 5வது முறையாக நேற்றும் உயர்த்தப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் பெட்ரோல் லிட்டருக்கு 34 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 107.87-க்கும், டீசல் லிட்டருக்கு 23 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 99.66-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 6-வது முறையாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் 108.20 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 32 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் 99.98 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சி.என்.ஜி. எரிவாயுவும் கிலோவுக்கு 3.50 ரூபாய் அதிகரித்துள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.