தமிழக செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி 20-ந்தேதி கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது பலசரக்கு, காய்கறி, பழம், பால், மருந்து உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு (எம்.எல்.) விடுதலை ஆகிய கட்சிகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.3, சி.என்.ஜி. எரிவாயு கிலோ ரூ.2 உயர்த்தி எண்ணெய் வணிக நிறுவனங்கள் அறிவித்திருப்பது மக்களின் அன்றாட வாழ்க்கை மீது மத்திய அரசு தொடுத்துள்ள கொடூரமான தாக்குதல் ஆகும். இத்தகைய தாக்குதலை இடதுசாரி கட்சிகள் வன்மையாக கண்டிக்கிறது. மே 1-ந்தேதி முதல் வணிக கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. ஆயிரக்கணக்கான உணவகங்கள் இழுத்து மூடப்படும் நிலையை உருவாக்கியது. இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது பலசரக்கு, காய்கறி, பழம், பால், மருந்து உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும்.

இதன்மூலம் சாதாரண, நடுத்தர மக்களே பாதிக்கப்படுவார்கள். பெட்ரோல், டீசல் உயர்வுக்கு காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வை மத்திய அரசு சுட்டிகாட்டுகிறது. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. இப்போது, சர்வதேச விலைகளை சுட்டிகாட்டி மக்களை ஏமாற்ற முனைகிறது. எனவே, பெட்ரோலியப் பொருட்கள் அத்தியாவசியமானது என்ற முறையில் மானியம் வழங்கி விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் வரும் 20-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.