நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள நெல்லையப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 58). இவரது மகன் அருண் (26).
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆறுமுகம் தோட்டத்துக்கு சென்ற போது வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அருண் மூலைக்கரைப்பட்டி பெருமாள் நகரில் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். அந்த காம்பவுண்டுக்கு உள்ளேயே ஒரு அறையும் கட்டி அங்கு அவர் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் அருணின் ஒர்க்ஷாப் பகுதியில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் கண்ணா காந்தி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றதாக அருண் மற்றும் அங்கிருந்த அவரது நண்பர்கள் தெரிவித்தனர். மேலும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு கேட்டு இருப்பதாகவும் அருண் போலீசாரிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் போலீசார் விசாரணையை தொடங்கிய போது சம்பவம் நடந்த பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் இல்லை. இதனால் போலீசாருக்கு அருணின் நண்பர்கள் மீது சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அருணுடன் கடையில் இருந்த அவரது நண்பர்களான நெல்லையப்ப புரத்தை சேர்ந்த முத்துக்குமார் (19), இயேசுபாலன் (24) ஆகிய 2 பேரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
ஆறுமுகம் கொலையில் கைதானவர்கள் தற்போது ஜாமீனில் இருப்பதால், அவரது மகனான அருணுக்கு போலீஸ் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவருக்கு தெரியாமலேயே அவரது நண்பர்களான 2 பேரும் பெட்ரோல் குண்டு வீசியதாக போலீசில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அருண் அளித்த புகாரின் பேரில், முத்துக்குமார் மற்றும் இயேசுபாலன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.