குடியிருப்பு பகுதியில் 6 அடி நீள மலைப்பாம்பு சிக்கி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே சுமார் 6 அடி நீளமுள்ள மலைப் பாம்பு ஊர்ந்து சென்றது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து தாம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் பிடிபட்ட பாம்பை தாம்பரம் வன சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இந்த மலைப்பாம்பை பாதுகாப்பான வனப்பகுதியில் விட முடிவு செய்து உள்னர். குடியிருப்பு பகுதியில் 6 அடி நீள மலைப்பாம்பு சிக்கி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் ஏற்கனவே ஆலப்பாக்கம் நெடுங்குன்றம் சாலையில் பெரிய முதலை ஒன்று சாலையில் சென்றது குறிப்பிடத்தக்கது.
ஆலப்பாக்கம் அருகே வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளது. இதனால் கடந்த சில ஆலப்பாக்கம், நெடுங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்புகள், முதலைகள் அடிக்கடி வருவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இதனால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை வெளியே அனுப்பும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும், புதர்கள், இருட்டான பகுதிகளில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.