குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், இரவு நேரத்தில் குளிர் காற்று வீசியது. இன்றும் மழை நீடித்தது.
நாகர்கோவில் நகர பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் மப்பும் மந்தாரமாக காணப்பட்டதுடன், அவ்வப்போது மழை தூறியது. பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் மழையிலிருந்து தப்பிக்க குடைகளை பிடித்துக்கொண்டு சென்றனர்.
கொட்டாரம், மயிலாடி, பூதப்பாண்டி, இரணியல், கோழிப்போர்விளை, சுருளோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. பேச்சிப்பாறை அணை பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையினால், அங்கு அதிகபட்சமாக 62.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
பெருஞ்சாணி மற்றும் மலையோர பகுதியான பாலமோர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால், அணைகளுக்கு வரும் நீர் வரத்து கணிசமாக உயர்ந்து உள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது.
பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று 2 அடி உயர்ந்த நிலையில், இன்று ஒரே நாளில் 5½ அடி உயர்ந்துள்ளது. இதேபோல், பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 2.25 அடி உயர்ந்து, காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 28.02 அடியாக உள்ளது.
அணைக்கு 2285 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 240 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 43 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 2090 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும், கடையாலுமூடு, குலசேகரம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதால், ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தோவாளை, செண்பகராமன் புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணைகளின் நீர்மட்டம் மட்டுமன்றி, பாசன குளங்களிலும் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளதால், சாகுபடி பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.