தமிழக செய்திகள்

பேரணாம்பட்டு அருகே மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலி

தந்தை, மகன் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லலகுப்பம் கிராமம் துலுக்கன்குட்டை பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 73),

விவசாய நிலத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மகன் சுரேஷ் (40). கறவை மாடுகளை வளர்த்து வந்தார். ரங்கநாதன் தனது விவசாய நிலத்தில் காட்டு பன்றிகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க மின் வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது.

பேரணாம்பட்டு

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. மாலை 6.30 மணியளவில் மழை நின்றதும் ரங்கநாதன் மின் வேலி அருகில் சென்று அங்கிருந்த அன்னக்கூடையை எடுக்க முயன்றார்.

மின்சாரம் தாக்கி பலி

அப்போது எதிர்பாராவிதமாக ரங்கநாதனின் கை மின் வேலியில்பட்டுள்ளது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு துடிதுடித்து உயிரிழந்தார். அங்கு பால் கறந்து கொண்டிருந்த சுரேஷ் ஓடிச்சென்று தென்னை மட்டையை கொண்டு தந்தையை காப்பாற்ற முயன்றார்.

அப்போது அவரது காலில் மின்கம்பி பட்டு அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில், அவரும் பரிதாமாக உயிரிழந்தார். தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து மின்சாரம் தாக்கி இறந்ததை பார்த்த ரங்காதன் மனைவி கலாவதி, சுரேஷ் மனைவி திலிபா ஸ்ரீ ஆகிய இருவரும் கதறிதுடித்தனர்.

பேரணாம்பட்டு தாசில்தார்

இது குறித்து தகவலறிந்த மேல்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பச்சமுத்து, பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், ரங்கநாதன், சுரேஷ் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பேரணாம்பட்டு தாசில்தார் தேவியும் நேரில் சென்று விசாரணை நடத்தினார். தந்தை, மகன் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT