ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பரிசல் சவாரி செய்த காட்சி.  
தமிழக செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் பரிசல் இயக்க அனுமதி- சுற்றுலா பயணிகள் உற்சாகம்

தற்போது காலாண்டு தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் இன்று காலை முதலே ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததை அடுத்து பரிசல் இயக்கத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. சுற்றுலா பயணிகள் மற்றும் பரிசல் ஓட்டிகள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் கரையோரப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது.

3 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து பின்னர் 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. தொடர்ந்து நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி மீண்டும் 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரண மாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இதனிடையே இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து மீண்டும் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

பரிசல் இயக்க அனுமதி

நீர்வரத்து குறைந்ததைத் தொடர்ந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து பரிசல் ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது காலாண்டு தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் இன்று காலை முதலே ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் உற்சாகமாக பரிசல் பயணம் செய்து ஒகேனக்கல் காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

மேட்டூர்

இதே போல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 2,250 கன அடியாக இருந்தது. அது இன்று காலை 3,440 கன அடியாக அதிகரித்து வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 76.84 அடியாக உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நேற்று இரவு முதல் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 38.88 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

SCROLL FOR NEXT