திமுக மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவது அரசின் ஒரே வேலை என சேகர்பாபு விமர்சித்தார். தமிழகத்தில் நடைபெறும் குற்றச்செயல்களுக்கு ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் கொலை,கொள்ளை என்று நாடே தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. பாலியல் வன்கொடுமைகளும் நடக்கின்றன. இந்த ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால் சிக்கி தமிழகம் சீரழிந்து கொண்டிருக்கின்றது. போதைப்பொருள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் தமிழக வெற்றிக் கழகத்தினரே ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
திமுக மீது பொய்யான அவதூறுகளை பரப்புவதுதான் இந்த ஆட்சியின் ஒரே வேலை. தங்கள் மீது இருக்கின்ற பழியையும் அவமானங்களையும் திசைதிருப்புவதற்காக அவர்கள் எடுத்துக்கொண்ட ஒரே ஆயுதம், திமுக என்ற மூன்றெழுத்துதான்.
நூலகத்தில் அடுக்கி வைத்திருக்கின்ற புத்தகங்கள் முதல் சமூகத்தில் நடைபெறுகின்ற குற்றங்கள் வரை அனைத்திற்கும் யார் காரணம் என்பது அவர்களுக்கே தெரியும். ஆனால், அவற்றையெல்லாம் திசைதிருப்பி, அதற்குக் காரணம் திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்று பல ரூபாய்களை செலவு செய்து தவறான பிரசாரம் செய்கின்றனர்.
அடுப்பில் எரிகின்ற நெருப்பாகத் தி.மு.கவும் கூரையில் எரிகின்ற நெருப்பாகத் த.வெ.கவும் இருக்கின்றன. மக்கள் தேர்தலில் தாங்கள் செய்த தவறை உணர்ந்து, மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
வருகின்ற காலங்களில் தேர்தல் என்ற ஒன்று வருகின்றபொழுது, வாக்குரிமை என்ற ஆயுதத்தால் இந்தக் ஆட்சியை வீழ்த்த மக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சேகர்பாபு எம்.எல்.ஏ. சென்னை சேத்துப்பட்டு, எம்.சி. நிக்கோலஸ் சாலையில் உள்ள எஸ்.ஆர்.எஸ். சர்வோதயா மாணவிகள் தங்கும் விடுதியில், 100-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கினார்.