அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலகிலேயே AI தொழில்நுட்பத்தில் ஊழல் செய்து சாதனை படைத்த தி.மு.க
பகுத்தறிவு- சுயமரியாதை- சமுகநீதியை தன் இறுதி மூச்சுவரை தமிழ்நாட்டிற்குக் கற்பித்தவர் நம் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார். அவர் வழியில் வந்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா, "மாநில சுயாட்சி" என்ற கொள்கையோடு தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆட்சியை ஏற்று நடத்தினார்.
ஆனால், அவர்கள் வழியில் வந்ததாகச் சொல்லிக்கொண்டு, அவர்கள் பெயரை மட்டும் தன் ஆட்சிக்கு முகமூடியாக போட்டுக்கொண்டு, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு துறையிலும் செய்ததெல்லாம் ஊழல்! ஊழல்! ஊழல் மட்டும்தான். இதைத்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக நாம் சொல்லிக் கொண்டிருந்தோம்.
இறுதியில் தந்தை பெரியாரின் பெயரில் அமைந்த நூலகத்திற்கு வாங்கிய புத்தங்களிலும் AI முறையில் ஊழல் செய்து 'உலக ஊழல் சாதனை'யைப் படைத்து நம்மையே திகைக்க வைத்துள்ளார். தமிழ் அறிவுலகத்தை அவமானத்தில் கூனிக்குறுக வைத்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
உலகிலேயே AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதன்முதலில் ஊழல் செய்து Artificial Intelligence Corruption DMK (AIC- DMK) என்னும் சாதனையும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த காலத்தில் தி.மு.க படைத்துள்ளது. இதன்மூலம், டிஜிட்டல் ஊழல், AI ஊழல் எனக் காலத்திற்கு தகுந்தவாறு ஊழல் செய்வதில் தன்னைத்தானே வளர்த்துக் கொண்டிருக்கிறது தி.மு.க., இதுதான் மு.க.ஸ்டாலினின் ஒரே சாதனை! தமிழ்நாட்டை பிடித்த தீராத வேதனை.
இப்படிப்பட்ட ஊழலால் உருவான போலியான- குப்பையான- ஒன்றுக்கும் உதவாத சக்கைகளை புத்தகங்களாக தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கொள்முதல் செய்ததாகக் கணக்குக்காட்டி பல கோடிகளைச் சுருட்டியுள்ளது மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் செயல்பட்ட ஊழல் கும்பல்!
மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது மட்டுமே இங்கு பிரச்சினை இல்லை. மாறாக, முந்தைய தலைமுறையின் அறிவுஜீவிகளை ஏமாற்றி, இன்றைய தலைமுறையின் அறிவுஜீவிகளின் மூளையை மழுங்கடித்து, வரவிருக்கும் நாளைய தலைமுறை அறிவுஜீவிகளின் எதிர்காலத்தை சூனியத்தில் தள்ளும் படுபாதகத்தைச் செய்துள்ளது மு.க.ஸ்டாலின் தலைமையிலான முந்தைய அரசு.
ஒரு நாளைக்கு மூன்று அறிக்கைகளை வெளியிட்டு த.வெ.க. அரசை விமர்சித்து வந்த மு.க.ஸ்டாலின், இந்தப் பிரச்சினை வெளியானது முதல் எங்கு பதுங்கி இருக்கிறார் என்பதே தெரியாமல் பம்மிக் கொண்டிக்கிறார். இப்போது வெளியிட வேண்டியதுதானே ஒரு அறிக்கையை? ஏன் இன்னும் இந்த விவகாரம் பற்றி அவரிடம் இருந்து எந்த அறிக்கையும் வெளி வரவில்லை?
பெரியார் அறிவுலகத்தைப்போல், கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும், இன்னும் தமிழ்நாட்டில் உள்ள எத்தனை நூலகங்களில் இதுபோன்ற ஊழல் புத்தகங்கள் புதைந்து கிடக்கிறதோ, அவையெல்லாம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டு களையெடுக்கப்பட வேண்டும்.
அதோடு, பெரியார் அறிவுலகத்தில் புத்தகம் வாங்கியதிலேயே இவ்வளவு ஊழல் என்றால், பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலக கட்டுமானத்தில் எவ்வளவு ஊழல் நடைபெற்றிருக்கும் என்பது பற்றியும் பொதுப்பணித்துறை வல்லுநர்களைக் கொண்டு ஆராய்ந்து உண்மைகள் விரைவில் வெளிக்கொண்டுவரப்படும்.
கழிப்பறையில் இருந்து கல்லறை வரை... சாக்கடையில் இருந்து மழைநீர் வடிகால்வாய் வரை... குப்பையிலிருந்து புத்தகங்கள் வரை என அத்தனையிலும் ஊழல் செய்த முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ஊழலில் பங்குப்போட்டுக் கொண்டு அவருடைய திருட்டுக் கூட்டாளிகளும் மக்கள் மன்றத்தில் தினம்தோறும் அவமானப்பட்டு வருகிறார்கள். விரைவில் சட்டத்தின் பிடியில் அகப்படுவார்கள். நீதிமன்றத்தில் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.
இதற்கிடையில் கோவை பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகம் கொள்முதல் செய்தததில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்க தி.மு.க. சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இது எப்படி இருக்கிறது தெரியுமா? முந்தைய காலங்களில் கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் பிக்பாக்கெட் அடிக்கும் ஜேப்படித் திருடனை யாராவது கண்டுபிடித்து "திருடன்... திருடன்" என்று சத்தம் போட்டால், உடனே அந்த ஜேப்படித் திருடன் கொஞ்ச தூரம் ஓடிப்போய், அதே கூட்டத்தில் கலந்திருக்கும் தன் கூட்டாளியான மற்றொரு திருடனிடம் திருடிய பர்சை (Purse) கைமாற்றிவிட்டு, "திருடன் திருடன்" என்று இவனும் சேர்ந்து கூட்டத்தோடு கத்துவான்.
மக்களும் "இவன் திருடன் இல்லைபோல... அங்கே ஓடுகிற மற்றொருவன்தான் திருடன்" என்று நினைத்து இவனை விட்டுவிட்டு அவனைத் துரத்துவார்கள். ஆனால், அது அந்தக் காலம். அது மலையேறிவிட்டது. மக்கள் இந்தக் காலத்தில் விழிப்படைந்துவிட்டார்கள். அதனால், மக்களிடம் மாட்டிக் கொண்டதும் தி.மு.க போடும் ஜேப்படி திருடன் வேலை இனி எடுபடாது. அதைப் புரிந்துகொண்டு கொஞ்சமாவது தி.மு.க. திருந்த வழி பார்க்கட்டும்.
தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட எண்ணற்ற நம் தலைவர்கள் பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவ சமுதாயம், மதச்சார்பின்மை கருத்துக்களை புத்தகங்கள் மூலமே இந்த மண்ணில் விதைத்தனர். ஆனால், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்தப் புத்தங்களில் எப்படி ஊழல் செய்யலாம் என்ற நஞ்சையும், பல தலைமுறைகளின் சிந்தனையை அழிக்கும் விஷத்தையும் ஊழல் புத்தகங்களால் விதைத்துள்ளார்.
அந்தக் கொடிய விஷத்தை, தமிழக முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட உள்ள நேர்மையான விசாரணை மற்றும் தமிழக அறிவுஜீவிகள், கல்வியாளர்கள், சமூக அரசியல் அறிஞர்கள் துணையுடன் முறியடிப்போம்! ஆரோக்கியமான சமுதாயத்தைப் படைப்போம்! அறிவார்ந்த தலைமுறையை உருவாக்குவோம்!
இவ்வாறு ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.