தமிழக செய்திகள்

மின்வெட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கன்னிகைப்பேர் ஏரிக்கரை அருகே சென்னை-பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டத்தால் சென்னை-பெரிய பாளையம் தேசிய நெடு ஞ்சாலையில் நள்ளிரவில் பல மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

பெரியபாளையம் அருகே உள்ள அக்கரப்பாக்கம் ஊராட்சியில் மேட்டு காலனி, அக்கரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளுக்கு வடமதுரை துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டு வந்ததால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு புரட்டாசி சனிக்கிழமையையொட்டி அப்பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் உற்சவம் நடைபெற்றது.

மின்தடை

இதனால் ஊர் முழுவதும் பல லட்சம் ரூபாய் செலவில் கண்ணைக் கவரும் வகையில் வண்ண,வண்ண மின்விளக்கு அலங்காரம் செய்திருந்தனர். ஆனால்,அன்று இரவு மின் சப்ளை தடைபட்டதால் மின் அலங்காரத்திற்கு செய்த செலவு வீணானது.நேற்று முன்தினம் மாலையும் மின்சார சப்ளை தடைப்பட்டது. இரவு நீண்ட நேரத்திற்கு பின்னர் மின்சார சப்ளை வழங்கப்பட்டது.

சாலை மறியல்

இந்தநிலையில் நேற்று மாலையும் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இரவுவரை மின்வினியோகம் சீராகவில்லை. இதுகுறித்து தகவல் தெரிவிக்க கிராமமக்கள் மின்வாரிய அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கன்னிகைப்பேர் ஏரிக்கரை அருகே சென்னை-பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.

போராட்டம்

தகவல் அறிந்ததும் பெரியபாளையம் போலீசார் விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மின்தடை குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட கிராமமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சென்னை-பெரிய பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT