தமிழக செய்திகள்

முதலமைச்சர் பிறந்தநாளுக்கு ‘புனர்பூசம், கடக ராசி என அர்ச்சனை செய்யுங்கள்’ - அமைச்சர் தமிழன் பார்த்திபன்

ஜூன் 22ம் தேதி முதலமைச்சர் விஜய் தனது 52வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை கோயில்களில் அர்ச்சனை செய்து கொண்டாட வேண்டும் என தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளார் போக்குவரத்துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,

“தமிழக வெற்றிக் கழக சேலம் மாவட்டம் 11 தொகுதிக்குட்பட்ட மாநகரம்,நகரம், ஒன்றியம், பேரூர், பகுதி, வார்டு மற்றும் கிளை கழக அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்களுக்கும் ஒரு முக்கிய வேண்டுகோள்,

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் மற்றும் கொள்கை தலைவர்களை குக்கிராம மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் நமது முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழக தலைவர் ச.ஜோசப் விஜய்யின் 52வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

ஒன்றியச் செயலாளர்கள் தங்களது ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பஞ்சாயத்துகள் மற்றும் கிளைகளில் நடைபெறும் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளில், பஞ்சாயத்து மற்றும் கிளைக் கழகச் செயலாளர்களுடன் ஒன்றிணைந்து கட்டாயமாக கலந்து கொண்டு கட்சி கட்டமைப்பை வலுப்படுத்திட வேண்டும்.

*பிளக்ஸ் பேனர் வைப்பதை தவிர்த்து விட்டு* அவரவர்கள் சக்திகேற்ப ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் உணவு, உடை மற்றும் பள்ளி மாணவ மாணவியருக்கு நோட்டு, பேனா, புத்தகம் போன்ற கல்வி உபகரணங்கள் வழங்குதல், மரக்கன்று நடுதல், ரத்ததானம் முகாம்கள் நடத்தி ரத்ததானம் செய்தல், மருத்துவ அணி சார்பில் மருத்துவ முகாம் நடத்துதல் என மக்களுக்கு உதவும் நல்ல பணிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் மற்றும்,

அவரவர் பகுதிகளில் இருக்கும் மசூதிகள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருக்கோவில்களில் *ச. ஜோசப் விஜய், பூசம் நட்சத்திரம், கடக ராசி* என்று அர்ச்சனை செய்து பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.