பள்ளியில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம் 
தமிழக செய்திகள்

நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதி மக்கள் முகாம்களில் தங்கவைப்பு

மலைப்பாதையில் ஆபத்தான நிலையில் மரம் மற்றும் மண் சரிவு ஏற்படும் இடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குன்னூர்-ஊட்டி இடையே தண்டவாளத்தில் மண் மற்றும் கற்கள் விழுந்துள்ளதால் இந்த வழித்தடத்தில் இடத்தில் இன்று ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

மண்சரிவு

நேற்றுமுன்தினம் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த மண்சரிவில் சிக்கிய அரசு பஸ் டிரைவர் ஜனகராஜ் பலியானார்.

மலைப்பாதை

இதனைத்தொடர்ந்து பேரிடர் மீட்பு குழுவினர், குன்னூர் தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய், போலீசார் இணைந்து சீரமைப்பு பணிகளை 3-வது நாளாக மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மலைப்பாதையில் ஆபத்தான நிலையில் மரம் மற்றும் மண் சரிவு ஏற்படும் இடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பள்ளியில் தங்க வைப்பு

குன்னூரில் நிலச்சரிவு அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிக்கரை, புதுக்காடு, குறும்பாடி ஆகிய கிராமங்களை சேர்ந்த 73 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஊட்டி நகரில் பெய்த தொடர்மழையால் நகராட்சியின் 4-வது வார்டுக்குட்பட்ட டாக்டர் அம்பேத்கர் காலனி பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கோடப்பமந்து நகராட்சி பள்ளியில் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பாதுகாப்பாக தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் எனவும், மழையின் தீவிரத்தை கண்காணித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மலை ரெயில் ரத்து

கனமழையால் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் மற்றும் பாறைகள் விழுந்து தண்டவாளங்கள் மற்றும் பல் சக்கரங்கள் சேதம் அடைந்தன. இதனால் மலை ரெயில் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு பணிகள் முடியும் வரை மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரெயில்வே ஊழியர்கள்

இந்தநிலையில் ரெயில்வே அதிகாரிகள் அந்த பகுதியை ஆய்வு செய்து பொக்லைன் எந்திரம் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சீரமைக்கும் பணி தற்போது முழுவீச்சில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தாமதம்

குறிப்பாக ஹில்குரோவ் ரெயில் நிலையம் அருகே அதிக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது லேசான மழை பெய்து வருவதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் மலை ரெயில் போக்குவரத்து மேலும் தாமதமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் குன்னூர்-ஊட்டி இடையே தண்டவாளத்தில் மண் மற்றும் கற்கள் விழுந்துள்ளதால் இந்த வழித்தடத்தில் இடத்தில் இன்று ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

மரம் விழுந்தது

கேத்தி பகுதியில் பெய்த மழையில் அப்பகுதியில் உள்ள வீட்டின் மீது பெரிய மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்தது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த ஒருவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வீட்டின் மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இதில் குறிப்பாக குன்னூர் நகர பகுதியில் ராஜாஜி நகரில் வீட்டின் அடிப்புறம் மண் சரிந்து அந்தரத்தில் வீடு தொங்குவதால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். மழை தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT