எம்பிக்கள் கூட்டத்தை புறக்கணிப்பவர்களை மக்கள் கவனிக்கின்றனர் என்றும் புறக்கணித்தவர்களை நினைவில் கொள்வர் என்றும் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழக நலன்களை விடத் தங்கள் அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் கலந்துகொள்ளாமல் இருக்கலாம்.
ஆனால், தமிழகத்திற்கு முதலிடமும், அரசியலுக்கு இரண்டாமிடமும் கொடுப்பவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கூட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்.
இது கட்சி அரசியல் பற்றியது அல்ல.
இது தமிழகத்தின் உரிமைகள், நலன்கள் மற்றும் எதிர்காலம் பற்றியது.
தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேவைப்பட்ட நேரத்தில் தமிழகத்துடன் நின்றவர்கள் யார் என்பதை அவர்கள் நினைவில் கொள்வார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய பா.ஜ.க. அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. இதனால் தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து உரிய முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்பிக்கள் பங்கேற்கின்றன. திமுக, அதிமுக புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து திமுக, அதிமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்து இருந்தார்.
இந்நிலையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அதிமுகவை சேர்ந்த எம்.பி.க்கள் இன்பதுரை, தம்பிதுரை, தனபால், தர்மர் ஆகிய 4 பேரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை எம்.பி.யும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், தேமுதிகவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுதீஷூம் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.