தமிழக செய்திகள்

பழவேற்காட்டில் இருளர்கள் குடும்பத்தினர் குடிதண்ணீர் இல்லாமல் தவிப்பு

வீடுகளுக்கு தண்ணீர் வருவது நிறுத்தப்பட்டு சாலையோரம் உள்ள குழாயில் மட்டும் வாரத்திற்கு ஒரு முறை மட்டும் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றனர்.

பழவேற்காடு, ராஜரத்தினம் நகர் இருளர் காலனி பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன இவர்களில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர் இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மெதுர் அருகே இருந்து பழவேற்காடு பகுதியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

தண்ணீர் விநியோகம்

இந்தநிலையில் வீடுகளுக்கு தண்ணீர் வருவது நிறுத்தப்பட்டு சாலையோரம் உள்ள குழாயில் மட்டும் வாரத்திற்கு ஒரு முறை மட்டும் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். அப்பகுதி மக்கள் வாரத்திற்கு ஒரு முறை வரும் தண்ணீரை பெரிய பாத்திரங்கள் டிரம்கள், கேன்களில் பிடித்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அதிக விலை கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.

குடிநீர் குழாய்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த சில வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி. இதுவரை திறக்கப்படாமல் குடிநீர் குழாய் இணைப்பு வழங்காமல் காட்சி பொருளாக உள்ளது. படிக்கட்டு கம்பி, இணைப்பு குழாய் துருப்பிடித்து காணப்படுகின்றன. ஜல்ஜிவன் திட்டத்தில் வீட்டிற்கு ஒரு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டும் இதுவரை குடிநீர் வழங்கப்படாமல் குழாய்கள் முழுவதும் பழுதடைந்து காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

ஊராட்சி நிர்வாகம்

வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை குடிநீர் வருகிறது. இதனால் மிகவும் சமையல் செய்வதற்கும் குடிக்கவும் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறோம். இது தொடர்பாக பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலகம், ஊராட்சி நிர்வாகம் அதிகாரியிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT