சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன் பாட்டால் இளைஞர்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் பட்டினப்பாக்கத்தில் வாலிபர் ஒருவரை கும்பல் விரட்டி சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன். இவர் கார் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று மாலை இவர் தனது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த சஞ்சய் என்பவர் ஹாரன் அடித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது நீலகண்டனையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக சஞ்சய் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் நீலகண்டனின் குடும்பத்தினர் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இன்று காலை விசாரணைக்கு அழைப்பதாகக் போலீசார் தெரிவித்த நிலையில், நேற்று இரவு சுமார் 11 மணியளவில் சஞ்சய், சந்தோஷ், ராகுல் உள்ளிட்ட 4 பேர் கத்திகளுடன் அங்கு வந்துள்ளனர். அங்கிருந்த வீடுகளின் கதவுகளை தட்டி மிரட்டிய அவர்கள் குழந்தைகள் உட்பட யாரையும் விடமாட்டோம் என கூறியுள்ளனர்.
அங்குள்ள வீட்டில் இருந்த நீலகண்டனை வீட்டிலிருந்து வெளியே இழுத்து சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. அவரைக் காப்பாற்ற முயன்ற மேலும் 2 பேருக்கும் வெட்டு விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் முதுகு, கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயமடைந்த நீலகண்டன் ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, கத்தியுடன் ஓடிச் சென்று நீலகண்டனைத் தாக்குவதும், தடுக்க முயன்றவர்களை நோக்கி கத்தியைச் சுழற்றி தாக்குவதுமான பதை பதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இதுகுறித்து நீலகண்டனின் உறவினர்கள் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக நேற்று மாலையிலேயே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தகைய தாக்குதலைத் தவிர்த்திருக்கலாம். மேலும், இப்பகுதியில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழும் சூழல் நிலவுகிறது என்றனர்.