தமிழக செய்திகள்

தேவா மறைவு - சீமான், பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்

தேவாவின் மறைவுக்குத் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் மற்றும் இசை ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் கானா பாடல்கள் மூலம் அடித்தட்டு மக்களின் இதயங்களை வென்ற தனித்துவமிக்க இசையமைப்பாளர், 'தேனிசைத் தென்றல்' தேவா இன்று சென்னையில் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.இவரின் இழப்புக்கு அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாதக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

சீமான்

தமிழ்த்திரையிசை உலகில் தனக்கெனத் தனித்துவமான இசை முத்திரையைப் பதித்து, தமிழ் மக்களின் இல்லங்களில் நீங்கா இடம்பிடித்த இசையமைப்பாளர் அன்பிற்குரிய ஐயா ‘தேனிசைத் தென்றல்’ தேவா அவர்களின் மறைவுச் செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

தேவ கானம் என்று போற்றப்பட்ட தனித்துவமிக்க ‘கானா’ பாடல்களாலும், துள்ளல் இசையாலும், இனிமையான மெட்டுகளாலும், மண்ணின் மணம் கமழும் பாடல்களாலும் மக்களின் இதயத்தோடு இரண்டறக் கலந்த ஐயா தேவா அவர்களின் மறைவு இசையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவருடைய இன்னிசையில் வெளிப்பட்ட நாட்டுப்புறத் தன்மையும், எளிய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய பாடல்களும் தமிழ்த் திரையிசை வரலாற்றில், காலத்தால் அழியாத தடங்களாக என்றும் நிலைத்திருக்கும்.

இசைகாற்று ஒலித்துக் கொண்டிருக்கும்

என்னுடைய முதல் படமான பாஞ்சாலங்குறிச்சியை தம்முடைய இன்னிசையால் வெற்றி காவியமாக்கிய ஐயா தேவா அவர்களின் மறைவு தனிப்பட்ட முறையில் என் மனதை மிகவும் கனக்கச் செய்கிறது. தமிழ் மண்ணின் மகத்தான இசைக்கலைஞன் ஐயா தேவா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுல நண்பர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவிப்பதோடு, துயரினை பகிர்ந்துகொள்கிறேன்.

போற்றுதற்குரிய பெருமகன் ஐயா தேவா அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்‘தேனிசைத் தென்றல்’ தேவா அவர்களின் மூச்சக்காற்று நின்றபோதும் அவர் படைத்தளித்த இசை காற்று தமிழர் உள்ளங்களில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

என்று பதிவிட்டுள்ளார்

பிரேமலதா விஜயகாந்த்

தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவு – ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.இசையால் கோடிக்கணக்கான இதயங்களை வென்ற மாபெரும் இசைக்கலைஞர், தேனிசைத் தென்றல் திரு. தேவா அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

அவரின் இசை நம்முடனே இருக்கும்

தமிழ்த் திரையுலகின் இசை வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றவர் தேவா அவர்கள். தனது இனிமையான மெட்டுக்களாலும், மண்ணின் மணம் மாறாத நாட்டுப்புற இசையாலும், காலத்தால் அழியாத பாடல்களாலும் தலைமுறைகள் கடந்து மக்களின் இதயங்களில் நீங்காத இடம்பிடித்த மகத்தான இசை மேதை.

எனது அன்புக் கணவர், புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கும் இடையே நிலவிய நட்பும் அன்பும் மிகவும் ஆழமானவை. திரையுலகில் இருவரும் இணைந்து பணியாற்றிய பல திரைப்படங்களின் பாடல்கள் இன்றளவும் மக்களின் மனங்களில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

கேப்டன் அவர்களுடன் இணைந்து பல மறக்க முடியாத இசை நினைவுகளை உருவாக்கிய தேவா அவர்கள், இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும், அவருடைய இசை என்றென்றும் நம்முடன் வாழும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மகன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா அவர்களுக்கும், உறவினர்களுக்கும், திரையுலகினருக்கும், உலகெங்கும் உள்ள அவரது இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT