11 ரெயில் நிலையங்களில் இந்த ரெயில் நின்று செல்கிறது. புறநகர் பகுதியில் இருந்து மக்கள் அதிக அளவில் பயணம் செய்வதை பார்க்க முடிகிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவை படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. 2-வது திட்டத்தில் 4-வது வழித்தடமான பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்த புதிய ரெயில் சேவை பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் அதில் பயணம் செய்து வருகிறார்கள். முதல் கட்டமாக 3 பெட்டிகளுடன் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
தற்போது 11 ரெயில் நிலையங்களில் இந்த ரெயில் நின்று செல்கிறது. புறநகர் பகுதியில் இருந்து மக்கள் அதிக அளவில் பயணம் செய்வதை பார்க்க முடிகிறது.
குறிப்பாக காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் 3 பெட்டிகளும் நிரம்பி காணப்படுகிறது. போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடிவதால் கூட்டம் கூட்டமாக ரெயில் நிலையங்களில் மக்கள் நிற்கிறார்கள்.
10 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படுவதால் கூட்டம் அதிகரித்து விடுகிறது. பயணிகள் நெரிசலில் சிக்கி பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
புதிய வழித்தடத்தில் சேவை தொடங்கிய சில நாட்களிலேயே பயணிகள் அதிகரித்து வருவதால் மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூட்டத்தை சமாளிக்க அடுத்த கட்ட நடவடிக்கை நோக்கி நகர்கிறது.
14 கி.மீ. தூரமுள்ள இந்த வழித்தடத்தில் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சென்னை நோக்கி மக்கள் பயணம் செய்வதை காண முடிகிறது.
கூடுதல் பெட்டிகள் இயக்கினால் மட்டுமே கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை உருவாகி வருகிறது.
பூந்தமல்லி-வடபழனி சேவையில் பயணிகள் அதிகரித்து வருகிறார்கள். இதனால் உடனே பெட்டிகளை அதிகரிக்க முடியாது. பயணிகள் பயன்பாட்டை ஆய்வு செய்து அதற்கேற்ப இடைவெளியே குறைத்து ரெயில்கள் இயக்கப்படும்.
தற்போது 10 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. 69 ரெயில் சேவை வழங்கப்படுகிறது. அடுத்து 7 நிமிட இடைவெளி அல்லது 8 நிமிட இடைவெளியில் இயக்குவது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும்.
நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை வேலையில் கூடுதலாக ரெயில்களை இயக்கலாமா என்பது பற்றியும் ஆய்வு செய்து பின்னர் முடிவு செய்யப்படும்.
மெட்ரோ ரெயில் சேவையின் இடைவெளியை குறைத்த பிறகும் கூட கூட்டம் அதிகமாக இருந்தால் பெட்டிகளின் எண்ணிக்கையை 6 ஆக உயர்த்த முடிவு செய்யலாம். படிப்படியான ஆய்வுக்குப் பிறகு சேவைகள் அதிகரிக்கப்படும். இந்த வழித் தடத்தில் இயக்குவதற்கு 36 ரெயில்கள் தயாராக இருக்கின்றன. அவற்றில் 15 ரெயில்கள் மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது. பயணிகளின் தேவையை ஆராய்ந்து அதற்கேற்ப சேவை மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.