தமிழக செய்திகள்

விமானத்தின் அவசரக்கால கதவை திறந்து குதித்து ஓடிய பயணி... சென்னையில் சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்!

சென்னை விமான நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த விமானத்தின் அவசரகால கதவை திறந்து குதித்தோடிய பயணி கைது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் இருந்து இன்று அதிகாலை 3.25 மணிக்கு சென்னை வந்த ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானம், தரையிறங்கி, டாக்ஸி வே-யில் சென்று கொண்டிருந்தபோது, பயணி ஒருவர் திடீரென அவசரகால கதவை திறந்து, மின்னல் வேகத்தில் வெளியில் குதித்து தப்பி ஓடினார்.

இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை பகுதியில் அவசரகால அபாய எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து, அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில் அவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த முகமது நிஜாமுதீன் செரீஃப் (30) என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே விமானம் ரன்வேக்கு வராமல், டாக்ஸிவேயிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் அடுத்ததாக லண்டனில் இருந்து வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் தரையிரங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

புதுக்கோட்டை பயணி முகமதுவை, பாதுகாப்பு அதிகாரிகள் தனி அறையில் வைத்து துருவித் துருவி விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில் அந்தப் பயணி மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசுவதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் உண்மையில் மனநிலை பாதிக்கப்பட்டவரா? இல்லையேல் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவரா? என்ற பல்வேறு கோணங்களில் சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் இருந்து மீண்டும் சார்ஜாவுக்கு அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். ஆனால் இந்த சம்பவம் காரணமாக விமானம் தாமதமாக 7.45 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதை போல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், நாளை அதிகாலை 5.35க்கு லண்டன் புறப்பட வேண்டியது காலை 9 மணி அளவில் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.