தமிழக செய்திகள்

வருகிற 17-ந்தேதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் 55-வது ஆண்டு தொடக்க விழா

தலைமைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து அணி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

அ.தி.மு.க. 55-வது ஆண்டு தொடக்க விழா 17-ந்தேதி சென்னை தலைமைக் கழகத்தில் நடைபெறுகிறது. உருவச்சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தி, கழகக் கொடியை ஏற்றி இனிப்பு வழங்குகிறார். மாவட்டங்களில் கொடிக் கம்பங்களை புதுப்பித்து, ஏழைகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட 'அ.தி.மு.க.' 17-ந்தேதி – (சனிக்கிழமை) அன்று 55-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் அன்று காலை 10.30 மணியளவில் சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் உருவச்சிலைகளுக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

அதனைத் தொடர்ந்து கழகக் கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்குகிறார்.

இதில் தலைமைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து அணி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

இதே போல் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட கிளை, வார்டு, வட்ட அளவில் ஆங்காங்கே கம்பீரமாக வீற்றிருக்கும் கழக கொடிக் கம்பங்களுக்கு புதுவர்ணம் பூசியும், கொடிக் கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிய கொடிக் கம்பங்களை அமைத்து, கழகக் கொடியினை ஏற்றி வைத்தும், எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்குகிறார்.

ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். மேலும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, கழகத்தின் தொடக்க நாளை எழுச்சியுடன் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT