தமிழக செய்திகள்

புதுப்பொலிவுடன் பூங்கா ரெயில் நிலையம்: பிரதமர் மோடி விரைவில் திறந்து வைக்கிறார்!

பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதே போல குன்னூர், சின்னசேலம் ஆகிய ரெயில் நிலையங்களிலும் பணிகள் இறுதி நிலையில் உள்ளன.

அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1300-க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை மத்திய அரசு மேற்கொண்டது. தெற்கு ரெயில்வேயில் 40-க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

விரைவில் திறப்பு

நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்ட 119-க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு உள்ளன. தெற்கு ரெயில்வேயிலும் 21 ரெயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் சென்னை பூங்கா, சின்ன சேலம், குன்னூர் உள்பட 8 ரெயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இவற்றை பிரதமர் மோடி விரைவில் திறக்க உள்ளார்.

இது குறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

பணிகள் இறுதி நிலை

இந்த திட்டத்தின் கீழ் ரெயில் நிலையங்களில் அனைத்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. லிப்ட் வசதி, எஸ்கலேட்டர், நடைமேடை, கிரானைட் கல் பதித்தல், பயணிகள் காத்திருப்பு அறை, நுழைவு வாயில்கள் சீரமைப்பு, மல்டி லெவல் பார்க்கிங், சி.சி.டி.வி. கேமரா, டிக்கெட் கவுண்டர் புதுப்பித்தல், பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்படுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை பூங்கா ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதே போல குன்னூர், சின்னசேலம் ஆகிய ரெயில் நிலையங்களிலும் பணிகள் இறுதி நிலையில் உள்ளன.

இந்த ரெயில் நிலையங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பிரதமர் மோடி 17-ந்தேதிக்குள் திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.