தமிழக செய்திகள்

பாபநாசம் அணை நீர்மட்டம் 68 அடியை நெருங்கியது

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது.

அணை பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேகமூட்டத்துடனும், பரவலாக இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முதலே நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நெல்லை

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. குறிப்பாக மூலைக்கரைப் பட்டி, நாங்குநேரி, அம்பை, கன்னடியன் கால்வாய் பகுதியில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மூலைக்கரைப்பட்டியில் 3 சென்டிமீட்டரும், நாங்குநேரியில் 2 சென்டிமீட்டரும் மழை பதிவாகியிருந்தது.

அதேநேரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது.

அணை

குறிப்பாக சேர்வலாறு அணை பகுதியில் 4 சென்டிமீட்டரும், மணி முத்தாறில் 2½ சென்டி மீட்டரும், பாபநாசத்தில் 2 சென்டிமீட்டரும் மழை பதிவாகியது. அணை பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 337 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணை நீர்மட்டம் 68 அடியை நெருங்கி உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 80 அடியை கடந்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 67 அடியை நெருங்கி உள்ளது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கனமழை கொட்டியது. செங்கோட்டையில் அதிகபட்சமாக 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

அணை பகுதியை பொறுத்தவரை மாவட்டத்தின் மிகச்சிறிய அணையான குண்டாறு அணையில் 3 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணை ஏற்கனவே நிரம்பி வழியும் நிலையில், அணையில் இருந்த பாசனத்திற்கு தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

கடனா நதி அணையில் 14 மில்லிமீட்டரும், ராமநதியில் 10 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. ஆய்குடியில் 5 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி பகுதியில் நேற்று இரவு முதல் தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வரும் மழை தாழ்வான பகுதிகளை தேங்கி கிடக்கிறது.

ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரத்தில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. இன்றும் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மாநகராட்சி

திருச்செந்தூர், காயல்பட்டினம், விளாத்திகுளம், காடல்குடி, வைப்பாறு, கயத்தாறு சுற்றுடவ்டாரத்திலும் கனமழை பெய்தது.

மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள வடிகால்களில் சாலை ஓர மண் குவியல் அடைப்புகளால் மழைநீர் முழுவதும் சாலையில் நின்று வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். வடிகால் அடைப்புகளை அகற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT