தமிழக செய்திகள்

பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரம்- சவுமியா அன்புமணி கேவியட் மனு தாக்கல்

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சார்பில் மேல்முறையீடு செய்தனர்.

பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும் பாமக எம்.எல்.ஏவுமான சௌமியா அன்புமணி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

தனது தரப்பு வாதத்தையும் கேட்ட பிறகே வழக்கில் உத்தரவிட வேண்டுமென சௌமியா கேவியட் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி 1 கி.மீ.க்கு கட்டுமானங்களுக்கு ஒப்புதல் தரக்கூடாது என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் புதிய கட்டுமானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சார்பில் மேல்முறையீடு செய்தனர்.

கடந்த நவம்பர் 18-ஆம் தேதி இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சதுப்பு நிலம் தொடர்பான வழக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், கட்டுமானத் தடை நீக்கம் குறித்து உச்சநீதிமன்றத்தையே அணுகுமாறு கிரெடாய் உள்ளிட்ட மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது.

அதேசமயம், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை வரையறை செய்யும் பணிகளைத் தமிழ்நாடு மாநில சதுப்பு நில ஆணையம் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.

இந்தநிலையில், தனது தரப்பு வாதத்தையும் கேட்ட பின்னரே எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்திப் பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி உச்சநீதிமன்றத்தில் இன்று கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

SCROLL FOR NEXT