தமிழக செய்திகள்

பழனி கோயில் நில மோசடி: பத்திரப்பதிவுத் துறை சார்பில் விசாரணைக்குழு அமைப்பு!

ஏற்கனவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

பழனி முருகன் கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தனிநபர்களுக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், முறைகேடுகளை முழுமையாக ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட புதிய விசாரணைக் குழு பத்திரப்பதிவுத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் கூடுதல் பதிவுத் தலைவர், உதவி பதிவுத் தலைவர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

வழக்கின் பின்னணி

பழனி மலையடிவாரத்தில் உள்ள ரூ. 100 கோடி மதிப்புள்ள தண்டபாணி சுவாமி அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தை, அறக்கட்டளை நிர்வாகிகள் எனக் கூறிக்கொண்டு சிலர் வெறும் ரூ. 2 கோடிக்கு இரு தனிநபர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

பின்னர் இந்த ஊழல் கண்டறியப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, இந்த முறைகேடான நிலப் பத்திரப்பதிவை உடனடியாக ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் பொறுப்பில் இருந்து இந்த பதிவை மேற்கொண்ட கொடைக்கானல் சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் உட்பட 4 பேர் மீது கூட்டுச்சதி, ஏமாற்றுதல், போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபியும் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த விசாரணைக்குழுவும் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.