தமிழக செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் - அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

ஏற்கனவே காவிரி நீர் பற்றாக்குறை, கடுமையான வறட்சி, பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம், பொய்த்து போன குறுவை சாகுபடி ஆகியவற்றால் உணவு உற்பத்தி குறைந்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக அரசு கொள்முதல் செய்யவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,

“தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன.

இயற்கையின் சவால்களையும், இடர்பாடுகளையும் எதிர்கொண்டு, மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், அரும்பாடுபட்டு விளைவித்த நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பதே, அவ்வப்போது பெய்யும் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதற்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளது.

விவசாயப் பெருமக்களின் உழைப்பை மதித்து அவர்களின் நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய வேண்டிய அரசு நிர்வாகம், நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு ஏற்றிச் செல்ல வாகனங்கள் இல்லை எனக்கூறி விவசாயிகளை அலைக்கழித்து, நெல் கொள்முதல் செய்வதில் காட்டும் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.

காவிரி நீர் பற்றாக்குறை, கடுமையான வறட்சி, பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம், பொய்த்து போன குறுவை சாகுபடி ஆகியவற்றால் உணவு உற்பத்தி குறைந்து அரிசி விலையும் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், விவசாயிகள் விளைவித்த நெல்லை கூட உடனடியாக கொள்முதல் செய்ய முடியாதது தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது.

எனவே, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் அனைத்தையும் உடனடியாக கொள்முதல் செய்திடுவதோடு, அவற்றை முறைப்படி கிடங்குகளுக்கும், அரவை ஆலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். ” எனக் குறிப்பிட்டுள்ளார்.