தொகுதி மறுவரையறை கூட்டத்தில் திமுக, அதிமுக எம்பிக்கள் பங்கேற்காதது வருத்தமளிப்பதாக ப.சிதம்பரம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர்,"தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஒவ்வொறு கட்சியும் தங்கள் நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும்" என கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டிய அனைத்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக, அஇஅதிமுக, பாமாக மற்றும் தேமுதிக கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது எனக்கு வருத்தமளித்தது.
தொகுதி மறுவரை (delimitation) பற்றித் தமிழ்நாட்டில் ஒருமித்த கருத்து உள்ளது என்பதை உலகுக்கு அறிவிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டோம் .
2026 ஏப்ரல் மாதத்தில் உருவாகிய ஒற்றுமை ஆகஸ்ட் மாதத்தில் ஏன் குலைந்தது என்ற கேள்வியை மக்கள் கேட்க வேண்டும்.
தொகுதி மறுவறை மசோதாவைப் பற்றி ஒவ்வொரு கட்சியும் தன் நிலையைத் தெளிவாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை காரணமாக தமிழகம் பாதிக்கப்படுவதாக கூறி அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியிலும் தொகுதி மறுவரையறையின்போது தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப்படக்கூடாது என்று அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்தன.
முதலமைச்சர் விஜய் தலைமையில் நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
ஆனால், இந்த ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.
த.வெ.க. ஆதரவு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் முதலமைச்சர் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சிக்கு 3 மேல்சபை எம்.பி.க்கள் உள்பட 12 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், மார்க்சிஸ்டு எம்.பி.க்கள் இருவரும் பங்கேற்றனர்.
ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ எம்.பி.யாக உள்ளார். மேல் சபை எம்.பி.யான இவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த எம்.பி.யும் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மக்கள் தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்திய தென் மாநிலங்கள், தொகுதி மறுவரையறை காரணமாகக் கூடுதல் இழப்பைச் சந்திக்க நேரிடும். எனவே தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 543 ஆக மட்டுமே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், புதிய தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.