விமானத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருந்ததை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, வானில் பறக்கத் தொடங்குவதற்கு முன்னதாகவே, உடனடியாக எடுத்த நடவடிக்கை காரணமாக மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வானில் பறக்கத் தொடங்கிய பின்பு ஏற்பட இருந்த பிரச்சனை தடுக்கப்பட்டது.
கோலாலம்பூர்- சென்னை- கோலாலம்பூர் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், தினமும் இரவு 10.50 மணிக்கு, கோலாலம்பூரில் இருந்து, சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் நள்ளிரவு 11.55 மணிக்கு, சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்டு செல்லும். அதேப்போல் இந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று இரவு 15 நிமிடம் முன்னதாகவே 10.35 மணிக்கு, சென்னைக்கு வந்து சேர்ந்தது.
அந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், மீண்டும் நள்ளிரவு 11.55 மணிக்கு, சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் 178 பயணிகள் 12 விமான ஊழியர்கள் உட்பட 190 பேர் பயணிக்க இருந்தனர்.
இந்த நிலையில் விமானி, பயணிகளை விமானத்தில் ஏற்றுவதற்கு முன்னதாக, விமானத்தின் இயந்திரங்கள் அனைத்தையும் சரிபார்த்தார். அப்போது விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் டேங்கில், ஆக்ஸிஜன் குறைவாக இருப்பதை கண்டுபிடித்தார். இந்த நிலையில் இது 178 பயணிகள் உட்பட 190 பேருக்கும் போதுமான ஆக்ஸிஜன் இல்லை என்பதை விமானி உணர்ந்தார்.
இந்த நிலையில் விமானத்தை இயக்குவது பெரும் ஆபத்து என்பதை உணர்ந்த விமானி, விமானத்தை இயக்குவதற்கு மறுப்பு தெரிவித்தார். அதோடு இது குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.
இந்த நிலையில் உயர் அதிகாரிகள் விமானி, பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
அதன்படி 178 பயணிகளில், 100 பயணிகளை மட்டும், விமானத்தில் ஏற்றி விமானத்தை இயக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. மற்ற 78 பயணிகளை சென்னையில் இருந்து மலேசியாவுக்கு செல்லக்கூடிய வேறு விமானங்களில் அனுப்பி வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அந்த ஏற்பாட்டை விமானியும் ஏற்றுக் கொண்டார்.
அதன்படி இந்த விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்து இருந்த தகுதி அடிப்படையில், முதல் 100 பயணிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் 100 பேரும், விமானத்தில் ஏற்றப்பட்டனர்.
அப்போது மற்ற 78 பயணிகள் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். அவர்களை விமான நிறுவன அதிகாரிகள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள், சமாதானம் செய்து, அவர்களையும் சென்னையில் இருந்து மலேசியா செல்ல இருக்கும் மற்ற விமானங்களில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அமைதிப்படுத்தினர். அதை பயணிகளும் ஏற்றுக் கொண்டனர்.
இதை எடுத்து அந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், இன்று அதிகாலை 2.20 மணிக்கு,100 பயணிகள், 12 விமான ஊழியர்கள், 112 பேருடன், சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு 2 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக புறப்பட்டு சென்றது.
அந்த விமானத்தில் ஏற்றப்படாத 78 பயணிகள் சென்னை விமான நிலையத்துக்குள் பயணிகள் ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சென்னையில் இருந்து கோலாலம்பூர் செல்ல இருக்கும் ஏர் ஏசியா மற்றும் மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விமானத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருந்ததை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, வானில் பறக்கத் தொடங்குவதற்கு முன்னதாகவே, உடனடியாக எடுத்த நடவடிக்கை காரணமாக மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வானில் பறக்கத் தொடங்கிய பின்பு ஏற்பட இருந்த பிரச்சனை தடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.