திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் எடுத்த நடவடிக்கைகள், தவெக அரசின் கவனத்திற்கு வராமல் அதிகாரிகள் செய்த தவறு என்று தமிழ்நாடு அமைச்சர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த தன்னிச்சையான செயலுக்காக அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்து மாநிலச் செயலாளர் சண்முகத்திடம் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திப்பு தொடர்பான செய்தியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ளார்.
குஜிலியம்பாறை வட்டாட்சியர், அந்தப் பகுதியில் உள்ள இடதுசாரி (சிபிஎம் மற்றும் சிபிஐ) கட்சி உறுப்பினர்களின் விவரங்களைச் சேகரிக்குமாறு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
இதேபோல், இடதுசாரி அமைப்புகளின் போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதைக் கண்காணிக்க உயர் கல்வித்துறையின் மூலம் ஒரு சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது.
இடதுசாரிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து சுற்றறிக்கைகள் திரும்பப் பெறப்பட்டன.
இந்நிலையில் அமைச்சர்கள் சிபிஎம் அலுவலகம் சென்று விளக்கம் அளித்து, இனி இதுபோன்று நடக்காது என உறுதியளித்துள்ளனர்.