தமிழக செய்திகள்

அமைச்சர் பதவி ஆசையில் சி.வி.சண்முகம் இப்படி பேசுகிறார் - ஓ.எஸ். மணியன்

தவெக ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்கும் நாளைய வாக்கெடுப்பில் நாங்கள் எதிராகவே வாக்களிப்போம்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையிலான குழு போர்க்கொடி தூக்கி உள்ளது. இதனால் அதிமுக இரு தரப்பாக பிரிந்துள்ளது.

இதனை தொடர்ந்து அதிமுக சட்டமன்றக்குழு தலைவராக எடப்பாடி பழனிசாமி தொடர வேண்டும் என்று ஒரு தரப்பினரும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை நியமிக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ. ஓ.எஸ். மணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* இபிஎஸ் திமுகவுடன் கூட்டணி பேசியதாக கூறுவது அவதூறு.

* இபிஎஸ்-க்கு ஆதரவாக 26 எம்எல்ஏக்கள் கடிதம் அளித்துள்ளனர்.

* 26 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் தான் சட்டமன்ற கொறடா உள்ளிட்ட பிற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* தூய்மையான ஆட்சி நடத்த உள்ளதாக கூறும் முதல்வர் விஜய் சிவி சண்முகம் தரப்பை ஏற்க மாட்டார் என நம்புகிறேன்.

* தவெக ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்கும் நாளைய வாக்கெடுப்பில் நாங்கள் எதிராகவே வாக்களிப்போம்.

* நாளைய வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

* பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியதாக சிவி சண்முகம் கூறியதற்கு முடிவெடுக்கும் அதிகாரம் இபிஎஸ்-க்கு மட்டுமே உள்ளது.

* அதிமுகவில் முக்கிய முடிவுகளை எடுக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

* அமைச்சராக வேண்டும் என்ற அதிகார ஆசை தான் சிவி சண்முகம் போன்றோரை இப்படி பேச வைக்கிறது.

இபிஎஸ் கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டாரா? என்ற கேள்விக்கு விவாதிக்கிறோம் என பதில் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.