சென்னை:
மேற்கு ஆசிய போர் சூழல் நெருக்கடியால் பல்வேறு நாடுகளில் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் வணிக சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நெருக்கடி சூழ்நிலையை சமாளிக்க மத்திய அரசு, மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்கவும். கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அதில் ஒன்றாக, இந்தியா முழுவதும் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட இ-20 பெட்ரோலை இன்று (ஏப்ரல் 1-ந்தேதி) முதல் விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும் என்றும், அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் எண்ணெய் அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு முன்னதாக 2030-ம் ஆண்டுக்குள் 20 சதவீதம் எத்தனால் கலப்பு என்ற இலக்கை நிர்ணயித்திருந்தது. இருப்பினும், தற்போது அந்த இலக்கு மாற்றியமைக்கப்பட்டு 2025-26 நிதியாண்டிலேயே முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பல எரிபொருள் நிலையங்களில் இ-20 விற்பனை தொடங்கியுள்ள நிலையில், இந்த புதிய உத்தரவு அதன் முழுமையான செயலாக்கத்துக்கு வழிவகுக்கும்.
மந்திய எண்ணெய் அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.
விற்பளை செய்யப்படும் பெட்ரோல் குறைந்தபட்சம் '95 ஆராய்ச்சி ஆக்டேன் எண்' (ஆர்.ஓ.என்.) தரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. எத்தனால் இயற்கையிலேயே அதிக ஆக்டேன் திறன் கொண்டது என்பதால், பெட்ரோலுடன் கலக்கும்போது அது எரிபொருளின் தரத்தை உயர்த்தி வாகனங்களின் என்ஜினைப் பாதுகாக்கிறது.
உன்நாட்டில் தயாரிக்கப்படும் கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களிலிருந்து பெறப்படும் எத்தனால், சுற்றுச்சூழலுக்கு சாதகமான மாற்று எரி பொருளாக கருதப்படுகிறது. இது பெட்ரோலுடன் கலக்கப்படும் போது உமிழ்வுகளை குறைக்க உதவுவதோடு, எண்ணெய் இறக்குமதி சார்பையும் குறைக்கும்.மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு மாற்று எரிபொருளாகக் கருதப்படுகிறது. இந்த நடவடிக்கை கச்சா எண்ணெய் இறக்குமதி சார்ந்திருப்பதை பெருமளவு குறைக்கும். எத்தனால் உற்பத்தி என்பது சர்க்கரை ஆலைகளுக்கு கிடைத்த கற்பகவிருட்சமாகும்.
போதிய அளவில் எத்தனால் உற்பத்தியும், கரும்புக் கழிவுகளில் இருந்து மின்சாரம் உள்ளிட்ட பொருட்களும் தயாரிக்கப்பட்டால் ஒரு டன் கரும்பிலிருந்து ரூ.21 ஆயிரம் வருவாய் ஈட்ட முடியும். கரும்பு விவசாயமும், கரும்பு ஆலைத் தொழிலும் அதிக லாபம் கொட்டும் தொழிலாக மாறும் என்றும், கிராமப்புற பொருளாதாரத்துக்கும் பலன் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 2023-ம் ஆண்டுக்குப் பிறகு சந்தைக்கு வந்த பெரும்பாலான வாகனங்கள் இ-20 எரிபொருளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு உள்ளன. இருப்பினும், பழைய வாகனங்களின் உரிமையாளர்கள் எரிபொருள் செயல்திறனில் 3 முதல் 7 சதவீதம் வரை குறைவு காணப்படலாம் என்றும், சில ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் தேய்மானம் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்க தலைவர் கே.பி.முரளி கூறும்போது. "பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களுக்கு எத்தனால் கலந்த இ-20 பெட்ரோலை வினியோகிப்பார்கள். இதுதொடர்பான அறிவிப்பு வந்தது. ஆனால் பெட்ரோல் வந்தால் தான் அதுகுறித்து எதுவும் கூற முடியும்.
விரிவான விளக்கம் எதுவும் எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை டீலர்களுக்கு அளிக்கவில்லை. விலையில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பு இல்லை. நம் நாட்டை பொறுத்தவரையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை. காரணம் ஒரே நாட்டில் எரிபொருள் கொள்முதல் செய்யப்படுவதில்லை. எனவே வாகன ஓட்டிகள் தேவைக்கு பெட்ரோல் போட்டு கொண்டு வாகனங்களை இயக்கலாம்" என்றார்.