தமிழக செய்திகள்

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு!

121 நாட்களுக்கு 6086.83 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப அணைகளின் தண்ணீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்து விட உத்தரவு.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் பாசனத் தேவைக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவிற்கிணங்க பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து தாமிரபரணி பாசனத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு கோடைமேலழகியான் கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய்,

பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள மருதூர் மேலக்கால் வாய்க்கால், மருதூர் கீழக்கால் வாய்க்கால், தென்கால் வாய்க்கால் மற்றும் வடகால் வாய்க்கால் ஆகிய 9 கால்வாய்களின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுக பாசனப்பரப்பு நிலங்களுக்கு கார் பருவ சாகுபடிக்கு 15.06.2026 முதல் 13.10.2026 முடிய 121 நாட்களுக்கு 6086.83 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப அணைகளின் தண்ணீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம், ஏரல் உள்ளடக்கிய வட்டங்கள், கிராமங்கள் உள்ள 36521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.