தமிழக செய்திகள்

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு: பா.ஜ.க. தலைவர்கள் வரவேற்பு!

உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் ஏற்றப்பட்ட சுடரைக் கொண்டு, நாளை மலை உச்சித் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள அளவைக்கல் தூணில் நாளை (நவ.28) தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று மலை உச்சித் தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

ஆனால், கோயில் மரபு மற்றும் ஆகம விதிகளைக் காரணம் காட்டி அன்று தீபம் ஏற்றப்படாததைத் தொடர்ந்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் ஏற்றப்பட்ட சுடரைக் கொண்டு, நாளை மலை உச்சித் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனமும், வருத்தமும் தெரிவித்து வரும்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக தலைவர்கள் இத்தீர்ப்பை வரவேற்று வருகின்றனர்.

தீர்ப்பை வரவேற்று பதிவிட்டுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.,

“கோடான கோடி முருக பக்தர்களின் எண்ணம் உச்ச நீதிமன்றத்தில் பிரதிபலித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

இந்து விரோதச் சக்திகளின் சூழ்ச்சிகளைச் சூரசம்ஹாரம் செய்து குன்றத்தை மீண்டும் வென்றான் முருகன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்,

“ஒவ்வொரு முருக பக்தருக்கும் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி!

நாளை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் புனித தீபம் ஏற்ற உத்தரவிட்டிருப்பதன் மூலமும், தங்களது அரசியல் எஜமானர்களின் கட்டளைக்கு ஏற்ப செயல்பட்டதாகத் தமிழக அதிகாரிகளைக் கடிந்துகொண்டதன் மூலமும், இண்டி கூட்டணி அரசின் சனாதன விரோத மனநிலையை உச்ச நீதிமன்றம் முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளது.

பாரதத்தின் புனிதமான பாரம்பரியங்களை எந்தவொரு அரசியல் சதியாலும் தடுத்து நிறுத்த முடியாது. முருகப்பெருமானின் தெய்வீக அருள் அனைத்து பக்தர்களையும் காத்து, துணிவு மற்றும் அறத்தின் பாதையில் அவர்களை வழிநடத்தட்டும்.

வெற்றிவேல்! வீரவேல்!” என தமிழில் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தேசியத்தலைவர் பிஎல் சந்தோஷ் இத்தீர்ப்பை மேற்கோள்காட்டி ‘ஹரோஹரா, ஹர ஹர மகாதேவ்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.,

“வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..

வீரவேல் முருகனுக்கு அரோகரா... வருகிறோம் வருகிறோம்.. தீபத்தூணில் தீபத்தை காண வருகிறோம்.. நன்றி முருகா” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தமிழ்நாடு துணைத்தலைவர் குஷ்பு.,

நவம்பர் 28 அன்று 'தீபத்தூணில்' தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை 'வேண்டுமென்றே மீறியுள்ளதாக' குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைவர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர்கள் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்கி, அதற்கான காரணத்தைக் கோரும் நோட்டீஸ்களை (show cause notices) பிறப்பித்துள்ளது.

இந்தத் தீர்ப்பிற்காக உச்ச நீதிமன்றத்திற்கு மனமார்ந்த நன்றிகள். இந்த உத்தரவு நீதித்துறையின் மீதான எங்கள் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இது இந்து மதம் அல்லது இந்துக்கள் குறித்த விஷயம் மட்டுமல்ல; இது ஒரு சமூகத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகள் தொடர்பானது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன்.,

“திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை – வரவேற்கிறேன்!

மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் பக்தர்களே தீபம் ஏற்றக் கிடைத்துள்ள தீர்ப்பால் முருக பக்தர்கள் மகிழ்ச்சி!

இனிவரும் காலங்களிலாவது த.வெ.க. அரசு இந்து விரோதப் போக்கைக் கைவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT