நாளை தென் தமிழகத்தில் லேசான மழை பெய்யக் கூடும், 28-ந்தேதியில் இருந்து வறண்ட வானிலை காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்கிறது.
இந்த நிலையில் மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 23-ந்தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக 24-ந்தேதி வலுப் பெற்றது.
பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் நிலவியது. இது தென்கிழக்கு திசையில் நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்ட லமாக மேலும் வலுப்பெற்றது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று (26-ந்தேதி) புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டு வானிலை மையம் அறிவித்தது.
அதன்படி கிழக்கு மத்திய மற்றும் அதனையொட்டிய மேற்கு-மத்திய வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘அர்னாப்’ புயலாக உருவாகியுள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் வி.ஆர். துரை கூறியதாவது:-
கிழக்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து அர்னாப் புயலாக வலுவடைந்து உள்ளது.
இன்று காலை 5.30 மணி நிலவரப்படி இது கிழக்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது.
இது ஸ்ரீ விஜயபுரத்தில் இருந்து (அந்தமான் தீவுகள்) வடமேற்கே சுமார் 590 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து (ஆந்திரா) கிழக்கு- தென் கிழக்கு 650 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவில் இருந்து (ஆந்திரா) கிழக்கு-தென்கிழக்கு 730 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்தில் இருந்து (ஆந்திரா) கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும் பாபட்லாவில் இருந்து (ஆந்திரா) கிழக்கே 910 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இது மேற்கு- வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று நள்ளிரவுக்குள் மேற்கு-மத்திய வங்கக்கடலில் தீவிர புயலாகவும் நாளை (27-ந்தேதி) அதே பகுதியில் மிக தீவிர புயலாகவும் வலுவடையக் கூடும்.
அதன் பிறகு இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து 28-ந்தேதி (புதன்கிழமை) முற்பகல் நேரத்தில் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே ஆந்திரா மற்றும் யானம் கடற்கரை பகுதிகளை கடக்கக் கூடும். அப்போது மிக தீவிர புயலாக இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வரையிலும் அவ்வப்போது 140 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும்.
இந்த புயல் காரணமாக தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. காற்றழுத்த பாதை காரணமாக இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசான மழையும் ராமநாதபுரம் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நாகை மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை தென் தமிழகத்தில் லேசான மழை பெய்யக் கூடும் 28-ந்தேதியில் இருந்து வறண்ட வானிலை காணப்படும். 31-ந்தேதி (சனிக்கிழமை) வரை மழைக்கு வாய்ப்பில்லை.
1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் இருந்து மழை மீண்டும் தொடர வாய்ப்புள்ளது. இந்த புயலின் காரணமாக வடகிழக்கு காற்று திசை மாறி ஆந்திரா நோக்கி செல்கிறது. இதனால் தமிழகத்தில் இந்த வாரம் முழுவதும் மழை குறைவாக இருக்கும். 5 நாட்கள் கழித்து வடகிழக்கு காற்று மீண்டும் திசை மாறி தமிழகத்தில் வீசக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.