தமிழக செய்திகள்

தி.மு.க.வில் நான் எல்.கே.ஜி.: செயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

தி.மு.க.வில் 70 வயதுக்கு மேல் பதவி கிடையாது என்பது கட்சி தலைமைக்கு மட்டும் விதிவிலக்கு.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், பி.எச்.டி. பட்டம் பெறும் அளவுக்கு கட்சியில் எனது செயல்பாடுகள் இருக்கும் என தெரிவித்தார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற செயற்குழுவில் முக்கிய பிரமுகர்கள் 8 பேர் வரை பேசினார்கள். இதில் தலைமையை கேள்வி கேட்ட சம்பவங்களும் நடந்துள்ளது.

முன்னாள் மத்திய மந்திரி பழனிமாணிக்கம் மற்றும் பூந்தமல்லி முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி பேசுகையில், எல்லா

பதவிகளுக்கும் 2 முறை மட்டுமே பதவியில் இருக்கமுடியும் என்று விதிகளை கொண்டு வரும்போது மாவட்டச் செயலாளருக்கு மட்டும் 3 முறை பதவி கொடுக்கப்படுவது ஏன்? அதையும் பரிசீலியுங்கள் என கேட்டுள்ளனர்.

திருவிடைமருதூர் ராமலிங்கம், ஈரோடு கனிமொழி, பிரபு, கஜேந்திரன், திருத்துறைப்பூண்டி இளையராஜா, முகமது சசி உள்ளிட்டோரும் கட்சி எடுத்த முடிவுகள் பற்றி பேசினார்கள்.

அப்போது சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நன்றாக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுகிறார். ஆனால் முன்னாள் அமைச்சர்கள் பேசுவது அந்த அளவுக்கு இல்லை. ஒரு எம்.எல்.ஏ. ஆளும் கட்சியைப் பார்த்து மாமன், மச்சான் என்றெல்லாம் பேசுகிறார். இப்படியெல்லாம் பேசலாமா? ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பேசச் சொல்லுங்கள் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

ஓ.பன்னீர்செல்வம்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், நான் சமீபத்தில்தான் புதிதாக கட்சியில் சேர்ந்தேன். தி.மு.க.வில் நான் எல்.கே.ஜி.தான். இனி பி.எச்.டி. பட்டம் பெறும் அளவுக்கு கட்சியில் எனது செயல்பாடுகள் இருக்கும் என கலகலப்பாக தெரிவித்தார்.

தலைமைக்கு விதிவிலக்கு

தி.மு.க.வில் 70 வயதுக்கு மேல் பதவி கிடையாது என்பது கட்சி தலைமைக்கு மட்டும் விதிவிலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.