ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள ஜப்பான், இத்தாலியன் பூங்கா பகுதிகளில் சால்வியா மலர்களை அதிக அளவில் பார்க்கமுடிகிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சுற்றுலா சீசனும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது அந்த மாவட்டத்தில் 2-வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன்காரணமாக தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர். அதிலும் குறிப்பாக வார இறுதி விடுமுறை நாட்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனை முன்னிட்டு சுமார் 15 ஆயிரம் மலர்த்தொட்டிகளில் சால்வியா, பேன்சி, அமராந்தஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்ச்செடிகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த செடிகளில் தற்போது பல வண்ணங்களில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றனர். இதனால் அந்த பூங்கா முழுவதும் தற்போது வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது.
அதிலும் குறிப்பாக பூங்காவின் பசுமையான புல்வெளிகளுக்கு நடுவே சிவப்பு நிற சால்வியா மலர்கள் வரிசையாக பூத்து நிற்பதால், இயற்கையே சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பது போன்ற அழகிய தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தாவரவியல் பூங்காவின் பிரதான நடைபாதைகளின் இருபுறமும் சால்வியா மலர்கள் அழகாக காட்சி தருகின்றன. இந்த மலர்களின் பேரழகை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், மலர்களின் அருகே நின்று புகைப்படம், செல்பி எடுத்து செல்கின்றனர்.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள ஜப்பான், இத்தாலியன் பூங்கா பகுதிகளில் சால்வியா மலர்களை அதிக அளவில் பார்க்கமுடிகிறது. பசுமையான புல்வெளிகள், அழகுடன் பராமரிக்கப்படும் செடிகள், வண்ணமயமான மலர் அலங்காரங்கள் ஆகியவை பூங்காவின் இயற்கை அழகுக்கு மேலும் அழகு சேர்த்து உள்ளன.
மேலும் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலை, அவ்வப்போது பெய்யும் மழை, பூங்காக்களின் வண்ண மலர்கள் ஆகியவை சுற்றுலா பயணிகளுக்குப் புதிய அனுபவத்தை அளித்து வருகின்றன.