தமிழக செய்திகள்

இங்க மட்டும்தான் சினிமா அரசியலைத் தீர்மானிக்குது- சீமான்

கல்வி ஒன்றுதான் சமூக மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.

வாகன பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு, கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நாங்கள் பெரும் நம்பிக்கையோடு இந்தத் தேர்தலை எதிர்கொண்டுள்ளோம். ஒரு கட்சியில் வெற்றி பெற்று, பின்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிடுவது வேதனைக்குரியது. இதற்காக மக்களின் வரிப்பணம் பெருமளவில் செலவழிக்கப்படுகிறது.

எப்படிப் பார்த்தாலும் இது முற்றிலும் அவசியமற்ற ஒரு தேர்தல். இங்கு மக்களுக்கான அரசியல் இல்லை. தேர்தல் அரசியலும் கட்சி அரசியலுமே உள்ளது. "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைத் தருவோம், இதைத் தருவோம்" என்று கூறுவது தேர்தல் அரசியல்.

பெண்களுக்கான உரிமைத் தொகையை விளம்பரப்படுத்துவது கட்சி அரசியல். என் தாய்க்கு 1,000 ரூபாய் கொடுப்பது தேர்தல் அரசியல் என்றால், என் தாயை மாதம் 1,000 ரூபாயை அவரே ஈட்டும் வகையில் உயர்த்துவதுதான் உண்மையான 'மக்கள் அரசியல்'.

கல்வி ஒன்றுதான் சமூக மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். எந்த அரசு கல்வியைச் சரியாகச் செயல்படுத்தத் தொடங்குகிறதோ, அங்கிருந்தே மக்களுக்கான அரசியல் தொடங்குகிறது.

திமுக 1,000 ரூபாய், அதிமுக 2,000 ரூபாய், தவெக 2,500 ரூபாய் என அறிவிக்கிறார்கள். ஏற்கனவே மாநிலம் கடன் சுமையில் இருக்கும்போது இவற்றை எப்படி வழங்குவார்கள்? திமுக 'எல்லோருக்கும் 1,000 ரூபாய்' என்று கூறிவிட்டுத் தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் என்று மாற்றியது.

அதேபோல அனைவருக்கும் 6 சிலிண்டர் என்று கூறிவிட்டு, தற்போது 1.20 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே எனக் கட்டுப்பாடு விதிக்கிறார்கள். திமுக, அதிமுக செய்ததை விடத் தமிழக வெற்றிக் கழகம் மோசமாகச் செயல்பட்டு வருகிறது. 1,200 கோடியில் சட்டமன்றக் கட்டிடம் கட்டுவது எப்படிப்பட்ட மாற்றம் என்று எனக்குத் தெரியவில்லை.

இப்போது அரசியல் என்பது தரம் தாழ்ந்து அவதூறுகளாக மாறியுள்ளது. "சித்தாந்தம் வேண்டாம், சினிமா போதும்" என்ற சூழல் நிலவுகிறது. சினிமாவில் நடித்தால் மட்டுமே ஒரு நாட்டின் தலைவனாகிவிட முடியும் என்ற நிலைமை இருப்பது வேதனைக்குரியது. சினிமா உலகெங்கும் இருக்கிறது, ஆனால் இங்கு மட்டுமே அது அரசியலைத் தீர்மானிக்கிறது.

இந்த நிலையை மாற்றவே நாங்கள் இடைத்தேர்தலில் நிற்கிறோம். உலகிற்கு அறிவைக் கடனாகக் கொடுத்த பெருமைமிக்க இனம் நம் தமிழ் இனம். முன்பு இங்கு வெற்றி பெற்ற வேட்பாளர் ஏன் பதவியை விட்டு விலகிச் சென்றார் என்று உங்களால் சொல்ல முடியுமா? இதுபோன்ற அவசியமற்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

கோவை விமான நிலையத்தில் நொய்யல் ஆற்றைப் பாதுகாப்பது குறித்து விவசாயிகள் என்னிடம் மனு அளித்தனர். "வாக்கை வேறு ஒருவருக்குச் செலுத்துகிறீர்கள், மனுவை மட்டும் என்னிடம் கொடுக்கிறீர்கள்" என்று அவர்களிடம் கூறினேன். உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் கேள்வி எழுந்தால் நிச்சயம் மாற்றம் நிகழும்.

திமுக, அதிமுக, தவெக வெல்வது வெறும் நிகழ்வு; ஆனால் நாம் தமிழர் கட்சி வெல்வது ஒரு வரலாற்று நிகழ்வு. எனவே, பொதுமக்கள் அனைவரும் 'விவசாயி' சின்னத்திற்கு வாக்களித்து வேட்பாளர் கார்த்திகாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT