கோவை பூண்டி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்து உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி முதல் சென்று வருகின்றனர்.
7 மலைகளை கடந்து சுயம்புலிங்கமாக உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க, வடமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து உள்ளனர். மே மாதம் இறுதிவரை பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆன்மிக பயணத்தில் மலையேறுபவர்களில் ஒருசிலர் உயிரிழப்பது ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் இதுவரை 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களின் உயிரிழப்பை தடுப்பதற்காக, அடுத்தாண்டு முதல் இணைய வழி முன்பதிவை மேற்கொள்ள வனத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக கோவை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வெள்ளியங்கிரி மலையேற்றம் மிகவும் கடினமான-செங்குத்தான மலைப்பயணம் ஆகும். இதில் நல்ல உடல் வலிமை, மிகுந்த மனவலிமை உடையவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
உடல் நிலை ஆரோக்கியம் தெரியாமல் மலையேறுவது ஆபத்தில் முடிகிறது. இதனால் அடுத்தாண்டு முதல் இணையத்தில் ஆதார் அட்டை, மருத்துவ சான்றுடன் பக்தர்கள் முற்றிலும் இலவசமாக முன்பதிவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்டவை தொடர்பான உரிய மருத்துவ சான்றிதழ்கள் இல்லாதவர்கள் மலையேற்றத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தரைத்தளத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் இருப்பதால் மலையேற நினைக்கும் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோரிடம் மருத்துவ சான்றை கேட்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.