குழந்தை பலி 
தமிழக செய்திகள்

திருவேற்காட்டில் காய்ச்சலுக்கு ஒரு வயது குழந்தை பலி

குழந்தை கிருதனுக்கு எந்த மாதிரியான காய்ச்சல் பாதிப்பு இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

திருவேற்காடு அருகே ஜெ.ஜெ.நகர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த கேசுபாபு–சங்கீதா தம்பதியரின் இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான 1 வயது கிருதன், இரண்டு நாட்களாக நீடித்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையாமல், இன்று காலை திடீரென மயங்கி பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தது பகுதி மக்களை உலுக்கியுள்ளது.

திருவேற்காடு அடுத்த காடுவெட்டி ஜெ.ஜெ. நகர், ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் கேசுபாபு. இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு கடந்த ஆண்டு இரட்டைக் குழந்தைகள் பிறந்தது.

காய்ச்சல்

இரட்டையர்களில் ஒரு குழந்தையான கிருதனுக்கு (வயது1) கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை.

இந்த நிலையில் இன்று காலை கிருதனுக்கு மீண்டும் காய்ச்சல் அதிகமாகி மயங்கினான். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கிருதனை உடனடியாக பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை கிருதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை கேட்டு பெற்றோர் கதறி துடித்தனர். திருவேற்காடு போலீசார் குழந்தை கிருதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தை கிருதனுக்கு எந்த மாதிரியான காய்ச்சல் பாதிப்பு இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தற்போது உன்னி காய்ச்சல், டெங்குகாய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு வயது குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT