கோவையில் திருமண நிகழ்வு ஒன்றிற்காக சென்ற துரை வைகோ முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது
அவர் கூறியதாவது:-
“மின்வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் திருடுபோய் உள்ளது. இதுதொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர், அதிகாரிகள், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு த.வெ.க அரசு அறிவித்த பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து தமிழ்நாடு அரசு, துறை அமைச்சர், முதல்-அமைச்சர் விஜய் ஆகியோர் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
த.வெ.க தனது தேர்தல் வாக்குறுதியில் விவசாய கடனை தள்ளுபடி செய்வோம் எனக்கூறினர். அது உண்மை தான். ஆட்சி பொறுப்பேற்ற பின்பு நிதி நிலைமையை கருத்தில் கொண்டு சிறுகுறு விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் வரை தள்ளுபடி செய்ய முடியும் என்பதே உறுதியான நிலை என்று கூறியுள்ளனர். போகப்போக விவசாய கடனை தள்ளுபடி செய்வோம் என்று கூறியுள்ளனர். நிச்சயம் செய்வார்கள்.
மாநிலத்தின் நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளதாக கூறியுள்ளனர். அதில் நிச்சயமாக தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் எதை எதை நிறைவேற்ற முடியும் என்பதை அவர்கள் தெளிவுபடுத்துவார்கள். எனவே த.வெ.க கூறிய திட்டங்களை நிறைவேற்ற நாம் கால அவகாசம் அளிக்க வேண்டும்.
முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்று 3 வாரங்கள்தான் ஆகிறது. அவர் அனைத்து துறைகளிலும் உள்ள குறைகளை சீரமைக்க நாம் சில காலம் அவகாசம் தர வேண்டும். சட்டம் ஒழுங்கை பொறுத்தவரை தி.மு.க ஆட்சியில் எப்படி இருந்ததோ அப்படியே த.வெ.க ஆட்சியிலும் இருக்கிறது.
ஆனால் 2 கட்சிகளின் ஆட்சியிலுமே குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். வருகிற நாட்களில் போதை கலாசாரத்தை ஒழித்து, குற்றசம்ப வங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர த.வெ.க அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவோம்.
நாங்கள் 10 ஆண்டுகளாக தி.மு.க கூட்டணியில் இருந்துள்ளோம். தற்போதும் தி.மு.க கூட்டணியில் தான் தொடர்கிறோம். எதிர்காலத்தில் நாங்கள் த.வெ.கவுக்கு ஆதரவு அளிப்போமா? என்பதை முடிவு செய்ய வேண்டியவன் நான் அல்ல. அது கட்சியின் பொதுக்குழுவை கூட்டி எடுக்க வேண்டிய முடிவு. மூப்பனார், வைகோ, விஜயகாந்த் ஆகியோரால் கொண்டு வர முடியாத மாற்றத்தை விஜய் கொண்டு வந்துள்ளார்.
ஒரு கட்சிக்கு கொடியும், சின்னமும் தான் அடிப்படை அடையாளம். அப்படி இருக்கும் அந்த கட்சியின் வேட்பாளர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடும்போது அந்த கட்சி தனித்துவத்தை இழந்து விடுகிறது. ஒரு கட்சி மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது. இதுதான் எனது நிலைப்பாடு.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது மிகவும் நல்ல விஷயம். ஆளுங்கட்சி ஒரு திட்டத்தை கொண்டு வரும் போது மக்களுக்கு எதிராக அது இருந்தால், கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதற்கு எதிராக குரல் எழுப்பும். இதனால் கூட்டணி அரசு என்பது நல்ல ஆரோக்கிய மான அரசியலாக இருக்கும்.” என அவர் தெரிவித்தார்.