தமிழக செய்திகள்

ஓணம் பண்டிகை: எடப்பாடி பழனிசாமி - தலைவர்கள் வாழ்த்து

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணத்தன்று ஓணம் திருநாள் கொண்டாடப்படுகிறது.

நாளை ஓணம் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

பாரம்பரிய சிறப்பு மிக்க பண்டிகையான திருஓணம் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த `ஓணம்’ திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மகாபலி சக்கரவர்த்தி

மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழித்திட, திருமால் வாமனன் அவதாரம் பூண்டு மூன்றடி மண் கேட்க, முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் விண்ணையும் அளந்து, மூன்றாம் அடியை மகாபலி மன்னனின் தலையில் வைத்து பூமிக்குள் புதைக்கும் முன்பு, அம்மன்னனின் வேண்டுகோளை ஏற்று ஆண்டுதோறும் தனது நாட்டு மக்களைக் காண வரம் கொடுத்தார். அதன்படி மக்களைக் காண வரும் மகாபலி மன்னனை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணத்தன்று ஓணம் திருநாள் கொண்டாடப்படுகிறது.

ஜாதி, மத பேதமின்றி மலையாள மொழி பேசும் மக்களால் பத்து நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின்போது, மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் வண்ணப் பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு, புத்தாடை அணிந்து, ஓணம் விருந்துண்டு, மோகினி ஆட்டம், கோலாட்டம் போன்ற நடனங்களை ஆடி உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றைப் பின்பற்றி அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கூடி வாழ்ந்திட வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தும் ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட தலைவர்கள் ஓணம் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.