தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
மிக மிக முக்கியமான நேரத்தில் நாம் இருக்கிறோம். தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பப்போகின்ற, அந்த தேர்லின் கடைசி பிரசாரம். ஸ்டாலின் சாரை வீட்டுக்கு அனுப்பப்போகின்ற, அந்த தேர்தலின் கடைசி பிரசாரம்.
அதாவது மக்களை சுத்தமாக கண்டுக்கவே கண்டுக்காத, இப்படிப்பட்ட ஒரு ஆட்சியை, இப்படிப்பட்ட ஒரு தலைவரை வீட்டுக்கு அனுப்பப்போற தேர்தலின் கடைசி பிரசாரம்.
இப்படிப் பட்டவர்களை வீட்டுக்கு அனுப்பாம கோட்டைக்கா அனுப்புவாங்க. எத்தனை எத்தனை பொய்யான வாக்குறுதிகள். பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றி விட்டு, அவருடைய லைஃவ்-ஐ மட்டும் நல்லா உயர்த்திகிட்டாரு. மக்களுடைய லைஃப்-ஐ எப்படி உயர்த்தினாரு தெரியுமா? வீட்டு வரியை உயர்த்தினாரு, தண்ணீர் வரியை உயர்த்திட்டாரு, தொழில் வரியை உயர்த்திட்டாரு, விலைவாசியை உயர்த்திட்டாரு. குப்பைக்குக்கூட வரி போட்டாரு. இப்படி மக்களின் கஷ்டங்களை மட்டுமே உயர்த்தி வைத்திருக்கிறாரு.
இதுவரை இல்லாத அளவிற்கு ஒருபடி மேல் சென்று கடன்மேல் கடன் வாங்கி கடன் சுமையையும் உயர்த்தி வைத்திருக்கிறாரு. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்காரு. இத்தனை லட்சம் கோடி ரூபாயை வைத்து எத்தனை பிரச்சினைகளை தீர்த்து இருக்கலாம். இளைஞர்களின் கல்விக் கடனை ரத்து செய்திருக்கலாம்.
விக்கிரவாண்டி மாநாட்டில் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்று தெரிவித்தோம். அதில் இருந்து இன்று வரை அந்த கொள்கையில் இருந்து மாறினோமா?. இல்லையே. இந்த விசயத்தில் 100 சதவீதம் இந்த விஜயை நம்பலாம்.
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களுக்கான ஆளாகாத்தான் இந்த விஜய் இருப்பான். எம்மதமும் நம் மதம். அந்த ஒரிஜினல் முகம்தான் இந்த விஜயின் முகம். விஜய் ஒன்று சொன்னால் அதில் இருந்து மாறவேமாட்டான்.
சிறுபான்மையினர் வாக்குகளை வாங்குதற்காக கோடிகோடியாய் பணத்தை செலவு செய்து, ஒருபக்கம் காங்கிரஸ் பைக்குள் போட்டுக் கொள்வது. ஒருபக்கம் கட்சியை காப்பாற்றிக் கொள்வதற்கான பாஜக உடன் மறைமுக கூட்டணி வைத்துக் கொள்வது. ஒரு பக்கம் கதர் வேஷம். மறுபக்கம் காவி வேசம் போட வேண்டியது.
நான் முன்னதாக சொன்ன மாதிரி திமுக-வுக்கும் பாஜக-வுக்கும் Under Ground டீலிங் உள்ளது. இரண்டரை வருடத்திற்கு முன்னதாக சொன்னது, தற்போது இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறதா.,
மு.க. ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டு மம்தா பானர்ஜி இதைத்தான் சொன்னாங்க. இதற்கு ஸ்டாலின் சார் என்ன சொல்லப் போறீங்க?. மக்களிடம் மாட்டிக்கிட்டு முழுக்கிறாரு, இந்த தேர்தலில் திமுக தோற்கப்போவது உறுதி.
தேர்தலுக்குப்பின் கட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அல்லவா?. ஏராளமான வழக்கு இருக்குது. மோடி, அமித் ஷா காலில் திமுக விழுகிறது இல்லையா என்று பாருங்கள். அன்னைக்கு திமுக-வின் மொத்த சாயமும் வெளுக்கப்போகுது.
பாஜக-வின் முதல் அடிமை யார் என்ற திமுக-வுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் நீயா நானா என போட்டி வேற. சிறுபான்மை மக்களுடன் விஜய் நிற்பான் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.
இவ்வாறு விஜய் பேசினார்.