தமிழக செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும்- டிடிவி தினகரன்

ஏழை, எளிய மக்கள் பல்வேறு விதமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் உயர்வுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் - ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும்.

உலகளவிலான சந்தையில் கச்சா எண்ணெயின் தொடர் விலையேற்றத்தால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், இயற்கை எரிவாயு விலை 2 ரூபாயும் நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டு புதிய விலை அமலுக்கு வந்துள்ளன.

வளைகுடா நாடுகளில் நீடிக்கும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் கொண்டுவருவதில் ஏற்பட்ட தடங்கலும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிதி இழப்பாலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றாலும், அதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏழை, எளிய மக்கள் பல்வேறு விதமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுப் போக்குவரத்திற்கான செலவோடு, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்து அவர்களுக்கு பல்வேறு விதமான பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெறுவதை உறுதி செய்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.