தமிழக செய்திகள்

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி பெற்றோர்களிடம் நூதன மோசடி- அதிகாரிகள் எச்சரிக்கை

பெற்றோரை நம்ப வைப்பதற்காக ஏற்கனவே உதவித்தொகை பெற்றதாக கூறி சில பெற்றோர்களுக்கு அனுப்பிய ஸ்கிரீன் ஷாட்டை போலியாக அனுப்பி வைக்கின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த 4-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாட புத்தகம், நோட்டு புத்தகம் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

உதவித்தொகை

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறையின் பெயரை பயன்படுத்தி சிலர் உதவித்தொகை என்ற பெயரில் பெற்றோரிடம் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

பள்ளிகளில் 6 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொள்ளும் மர்மநபர்கள் உங்களது குழந்தை ரூ.50 ஆயிரம் உதவி தொகை பெற தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதை பெற ரூ. 18 ஆயிரம் முன்பணமாக செலுத்த வேண்டும். இந்த தொகை பின்னர் திருப்பி அளிக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து பெற்றோரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு கியூஆர்.கோடு ஸ்கேன் குறியீட்டை அனுப்பி வைத்து அதன் மூலம் பணம் செலுத்துமாறு கூறுகிறார்கள்.

மேலும் பெற்றோரை நம்ப வைப்பதற்காக ஏற்கனவே உதவித்தொகை பெற்றதாக கூறி சில பெற்றோர்களுக்கு அனுப்பிய ஸ்கிரீன் ஷாட்டை போலியாக அனுப்பி வைக்கின்றனர்.

இதை உண்மை என நம்பிய சில பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட எண்களுக்கு பணத்தை அனுப்பி வைக்கின்றனர். பின்னர் பணம் செலுத்திய ஓரிரு நாட்களில் அவரது வங்கி கணக்கில் உள்ள மொத்த தொகையும் மர்மநபர்கள் தங்களது வங்கி கணக்குக்கு மாற்றி விடுகிறார்கள். சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது.

எச்சரிக்கை

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பள்ளிக்கல்வித்துறை சார்பில் உதவித்தொகை வழங்குவதற்காக பெற்றோர்களிடம் யாரும் தொடர்பு கொள்வதில்லை. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சமூக நலத்துறை என அந்தந்த நலத்துறை சார்பில் மாணவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக உதவித்தொகை அனுப்பப்படும். கூகுள் பே, போன் பே போன்றவற்றின் மூலம் அனுப்பப்படு தில்லை.

இது தொடர்பாக வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகளை பெற்றோர் நம்ப வேண்டாம். கடந்த காலங்களில் இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே மோசடி நபர்களிடம் ஏமாறாமல் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது போன்ற அழைப்புகளை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.