கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தீவிரமாக நடைபெறுவதால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம். இதனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார், கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ. மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 5 பிரிவுகளில் சில பிரிவுகள் பிணையில் வெளியில் வர முடியாத பிரிவுகளாகும்.
இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங் இன்று கள்ளக்குறிச்சிக்கு வந்து தனது விசாரணையை தொடங்க உள்ளார். இதற்கிடையே இன்று காலை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் வீட்டிற்கு நேரில் வந்து விசாரித்து, அவரிடம் விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கி சென்றனர்.
இந்த வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தி அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் போலீசார் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. இந்த நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கக்கூடிய அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ. தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அவரை கட்சியில் இருந்து நீக்கவும் தமிழக வெற்றிக்கழகம் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
முதலில் அவரை கட்சியில் இருந்து நீக்கி விட்டு அதன்பிறகு கைது நடவடிக்கைகள் எடுக்கப்படாலம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் போலீசாரும் அவரை கைது செய்து காவலில் எடுத்து விசாரணையை தீவிரப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.