தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடும் விமர்சனத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்திற்கு, இளைஞர்களே நீங்கள்தான் எதிர்காலம்!. இனி நம் plan and execution-ஐ upgrade செய்வோம். ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள்! புதிய வரலாற்றை எழுதுவோம்!
இவ்வாறு மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
கூட்டத்தில் மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் மீதும், கழகத் தலைவர் அவர்கள் மீதும் நம்பிக்கை வைத்து தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்காளர்களுக்கு இந்தக் கூட்டம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில், கொள்கை உறுதியோடு மதச்சார்பின்மை சக்திகளை ஒன்றிணைத்து ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை’ உருவாக்கி, தேர்தல் களத்தில் நம்மையெல்லாம் வழிநடத்தி, முதன்மை தொண்டராய் ஓய்வில்லாமல் உழைத்து, 73 சட்டமன்றத் தொகுதிகளில் நம் கழகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற முதன்மை காரணமாக விளங்கிய நம் கழகத் தலைவர் அவர்களுக்கு இந்தக் கூட்டம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
2026 தேர்தல் களத்தில், தாய்க் கழகத்துடன் இணைந்து கழகத் தலைவர் மற்றும் இளைஞர் அணிச் செயலாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி ஓய்வில்லாமல் உழைத்த இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவருக்கும் இந்தக் கூட்டம் தனது மனமார்ந்த பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் கழகம் சார்பில் போட்டியிடுவதற்கு இளைஞர் அணியின் மீது நம்பிக்கை வைத்து, நமது நிர்வாகிகளுக்கு வாய்ப்பளித்த நம் கழகத் தலைவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியையும், வெற்றிபெற்ற நிர்வாகிகளுக்கு பாராட்டுகளையும் இந்தக் கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்ற கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு வழங்கி, வழிநடத்தும், கழகத் தலைவருக்கு நன்றியையும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் இளைஞர் அணிச் செயலாளருக்கு வாழ்த்துகளையும் இந்தக் கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
தேர்தல் களத்தில் கழகம் வெற்றிவாய்ப்பை இழந்ததற்கான காரணத்தைக் கண்டறிய கழக நிர்வாகிகள்- உடன்பிறப்புகள் - பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிய இணையதளம் ஒன்றை துவக்கியதோடு, தொகுதிதோறும் சென்று நேரடியாக அனைவரையும் சந்திக்கவும் ஆய்வுக்குழுவை நியமித்திருக்கிறார்
நம் கழகத் தலைவர். கழகத் தலைவரின் இந்த முன்னெடுப்புகளுக்கு நன்றி தெரிவிப்பதோடு, கழகத் தலைவர் அவர்கள் கழகத்தில் மேற்கொள்ளவிருக்கும் அனைத்துவகை மறுசீரமைப்பிற்கும் கழக இளைஞர் அணி துணை நிற்பதோடு, வரும் காலங்களில் கழகத் தலைவர் அவர்கள் இடும் கட்டளைகளை - பணிகளை தொய்வின்றி நிறைவேற்றி, கழகப் பணியை மென்மேலும் வீரியத்துடன் மேற்கொள்ள உறுதியேற்கிறோம்.
இந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது.